மரபணுவை அடையாளம் கண்டு அழிக்கும் கேன்சர் சிகிச்சை!
மரபணுவை அடையாளம் கண்டு அழிக்கும் கேன்சர் சிகிச்சை!
PUBLISHED ON : ஆக 06, 2023

கேன்சர் பாதிப்பிற்கு பல வெளிக்காரணிகள் இருந்தாலும், மரபணு தான் பிரதான காரணமாக உள்ளது. குறிப்பிட்ட கேன்சரை உண்டாக்கும் மரபணு உள்ளதா என்பதை கண்டறியும் மரபணு சோதனை இல்லாமல் இருந்தது. தற்போது, அனைத்து விதமான மரபணு சோதனைகளும் இந்த மையத்தில் உள்ளன.
நம் நாடு உட்பட தெற்காசிய நாடுகளில், நுரையீரல் கேன்சர் பாதிப்புக்கு 50 சதவீதம், 'ஈஜிஎப்ஆர்' என்ற குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணம். சென்னை அடையாறு கேன்சர் மையத்தில் நாங்கள் பார்த்தவரை, 37 சதவீதம் இந்த மரபணு மாற்றத்தால் தான் நுரையீரல் கேன்சர் வருகிறது.
நம் நாட்டில், பெண்களுக்கு அதிக அளவில் நுரையீரல் கேன்சர் வருகிறது. நம் நாட்டைப் பொருத்த வரை, மேற்கத்திய நாடுகளைப் போன்று சிகரெட் பழக்கம் கிடையாது. அதனால், மரபணு தான் நுரையீரல் கேன்சருக்கு காரணம்.
பாதிப்பிற்கு இந்த மரபணு தான் காரணம் என்று உறுதியானால், கேன்சர் செல்களை மட்டும் அடையாளம் கண்டு அழிக்கும் 'டார்கெட்டெட் தெரபி' கொடுத்தால் போதுமானது; மருந்துகள் நன்றாக வேலை செய்யும். இதற்கு முன்பு அப்படி இல்லை. நுரையீரல் கேன்சர் பாதித்த அனைவருக்கும் பொத்தாம் பொதுவாக அதற்கான மருந்தை கீமோதெரபி சிகிச்சையில் கொடுத்து விடுவோம். குறிப்பிட்ட மரபணுவில் மாற்றம் இருந்தால் மட்டுமே மருந்து வேலை செய்யும். இல்லாவிட்டால் பலன் இருக்காது. மருந்து கொடுத்து பார்த்த பின் தான் இதை தெரிந்து கொள்ள முடியும். இப்போது அப்படி இல்லை. யாருக்கெல்லாம் மரபணுவில் மாற்றம் இருக்கிறதோ அவர்களுக்கு இந்த டார்கெட்டெட் மருந்து கிடைக்கிறது.
அதே போன்று ரத்த கேன்சர் அபாயத்தை கண்டறியும் மூலக்கூறு பரிசோதனையும் இங்கு உள்ளது. மார்பக கேன்சரில் நிணநீர் கட்டிகள் பரவாமல் இருந்தால் கீமோ தெரபி தேவையா, இல்லையா; சிகிச்சைக்கு எடுத்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் மார்பக கேன்சர் பாதிப்பு மீண்டும் வருமா, வராதா என்பதை கண்டறிந்து, வராது என்பது உறுதியானால், கீமோ தெரபி தேவையில்லை; ஹார்மோனல் தெரபி மட்டும் தரலாம். இதற்கான பரிசோதனை எல்லாம் தற்போது நம்மிடம் உள்ளது.
கடந்த 2021ல் நுரையீரல் கேன்சருக்கான மரபணு பரிசோதனையை ஆரம்பித்தோம். இந்த வசதி இல்லாத பிற மருத்துவ மையங்களில் இருந்து மாதிரிகளை அனுப்பினாலும், பரிசோதனை செய்து தர தயாராகவே உள்ளோம். காரணம், நுரையீரல் கேன்சரைப் பொருத்தவரை, இந்த பரிசோதனை செய்யாமல் சிகிச்சை தருவது தேவையற்றது. பரிசோதனை முடிவுகளை 48 மணி நேரத்தில் கொடுப்பதால், உடனே டாக்டர்களால் சிகிச்சையை ஆரம்பிக்க முடிகிறது.
டாக்டர் ஆர். விஜயலட்சுமி, தலைவர்,
கேன்சர் தடுப்பு துறை,
அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட், சென்னை.rvijiciwia@gmail.com, r.vijayalakshmi@cancerimstitutewia.org

