PUBLISHED ON : ஆக 06, 2023

குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் மிகவும் அதிகரித்து வருகிறது. ஐம்பது வயதுக்கு மேல் பாதித்த சர்க்கரை கோளாறு, 40 வயதில் பாதிப்பை ஏற்படுத்தி, 30, 20 என்று குறைந்து, கடந்த 10 ஆண்டுகளில் 8, 9 வயதிலேயே 'டைப் - 2' சர்க்கரை கோளாறு வருகிறது.
இதற்கு மிக பிரதான காரணம், உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகள் எல்லாம் அதிக கலோரி நிறைந்ததாக உள்ளன. இவற்றில் பிரதானமாக உப்பு, எண்ணெய், மைதா, சர்க்கரை, சுவையைத் துாண்டும் பல வேதிப்பொருட்களை சேர்க்கின்றனர்.
வெறும் ருசிக்காக மட்டுமே வியாபார நோக்கில் தயாராகும் உணவுகளால், கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது; உடல் பருமன் கூடுகிறது. இதன் தொடர்ச்சியாக உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் குழந்தைகளுக்கு வருகின்றன. இவ்வளவு சிறிய வயதில் இவையெல்லாம் வரவே கூடாது. இத்துடன் சேர்த்து ரத்த சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.
நம் குழந்தைகளிடம் உடற்பயிற்சி என்பதே மிகவும் குறைவு. அதிலும், கொரோனா பாதிப்பிற்கு பின், இது மிகவும் குறைந்து விட்டது. பள்ளிகளிலும் பி.டி., எனப்படும் உடற்பயிற்சி வகுப்புகள் இருப்பதில்லை. எது எப்படி ஆனாலும் பரவாயில்லை. அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள் மத்தியில் மன அழுத்தம் அதிகமாக உள்ளது.
குழந்தைகள் என்றாலே சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆனால், உட்கார்ந்த இடத்திலேயே தான் அனைத்தும் செய்கின்றனர். முடிந்த வரை வெளியில் உணவு வாங்கி தருவதைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்புகள் என்று இயற்கையான உணவுகளை வீட்டிலேயே சமைத்து தந்தால், நிச்சயமாக பலன் இருக்கும். நம்முடைய பாரம்பரிய உணவுகளிலேயே எல்லா சத்துகளும் உள்ளன.
என் குழந்தை மிகநன்றாக விளையாடுவான். அப்படியும் ஏன் பிரச்னை வந்தது என்று சிலர் கேட்பதுண்டு. தேவையற்ற கலோரியை எரித்த பின், அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிட்டால், அதனால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.
உயரம், வயதுக்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பர். அதிகப்படியான உடல் எடையை குழந்தை குறைக்க, வெறும் டாக்டரின் ஆலோசனை மட்டும் பலன் தராது.
பெற்றோர், பள்ளி நிர்வாகம் என்று அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது, ஓடியாடி விளையாடக்கூடிய ஏதாவது ஒரு விளையாட்டை ஒரு மணி நேரம் குழந்தைகள் விளையாட வேண்டும்.
டாக்டர் ஆர்.எம். அஞ்சனா,
சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசகர், சென்னை

