PUBLISHED ON : ஜூன் 16, 2013

எனது நண்பர் வாயை பெரிதாக திறந்தால் அப்படியே நின்று விடுகிறது. பிறகு கையால் வாயை மூடுகிறார். இதற்கு தீர்வு உண்டா?
வாய் திறந்தபடியோ அல்லது மூடியபடியோ நின்று கொள்வதற்கு, 'லாக் ஜா' என்று பெயர். இது கீழ்த்தாடை தலையோடு சேரும் இணைப்பில் வரும் பிரச்னை. இந்த இரு எலும்புகளும் உராயாமல் இருப்பதற்காக நடுவில் 'திசுவால்' ஆன சிறிய 'டிஸ்க்' இருக்கும். தாடை எலும்பில் அடிபடும்போது அல்லது எலும்பு தேயும் போது அல்லது எலும்பு இணைப்பில் வீக்கம் வரும்போது, இந்த 'டிஸ்க்' அதன் இடத்தைவிட்டு நகர்ந்துவிடும்.
இதுவே தாடை எலும்பை மூடவிடாமல் தடுக்கும். ஆரம்பத்தில் கையால் தள்ளினால் அந்த 'டிஸ்க்' அதன் இடத்திற்கு வந்து வாய் மூடிக்கொள்ளும். இப்படியே விட்டால், நாளடைவில் கையால் தள்ளினாலும் மூட முடியாது. 'ஆர்த்தரைட்டிஸ்' போன்ற நோய் உள்ளவர்களுக்கு இது அதிகமாக வரும். இதற்கான காரணத்தை சரிசெய்ய வேண்டும்.
அதோடு சேர்த்து தாடைக்கான வாய் மூடி திறக்கும் பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால், வலியை குறைப்பதற்கும், வாய்ப் பகுதியில் உள்ள தசைகளை தளர்த்துவதற்கும் மருந்து சாப்பிட வேண்டும். 'மவுத் கார்ட்' என்னும் சாதனம் ஒன்றை, உங்கள் அளவுக்கு ஏற்ப செய்து அணிந்து கொள்வது நல்லது. முறையான சிகிச்சையால் இந்த 'டிஸ்க்' இடம் மாறாமல், அதன் இடத்தில் நிலையாக இருக்கும். வாய் திறப்பதிலும், மூடுவதிலும் எந்தச் சிரமமும் இருக்காது.
எனது பற்கள் பார்ப்பதற்கு சிறியதாக உள்ளது. முகத்திற்கும், பற்களுக்கும் பொருத்தம் இல்லாமல் உள்ளது. பற்களை பெரிதாக்க முடியுமா?
பெற்றோருக்கு சிறிய பற்களாக இருந்தால், நமக்கும் பற்கள் சிறியதாக வளரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஹார்மோன் பிரச்னை உள்ளவர்களுக்கும், சில பற்கள் மட்டும் சிறிதாக முளைக்கும். இதனால் எந்தப் பிரச்னையும் வராது. முன்பற்கள் மிகசிறியதாக இருந்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்காது. இதற்கு பற்களின் அளவையும் அவற்றின் நடுவில் உள்ள இடைவெளியையும் பொருத்து, சிகிச்சை செய்ய வேண்டும். முன்பற்களுக்கு 'காம்போசிட்' அல்லது 'செராமிக்' என்னும் இருவேறு பொருட்களால் 'வெனியர்' என்னும் தகடு பொருத்தலாம். இவை பற்களின் நிறத்திலேயே இருக்கும். பற்களை பெரியதாக்கி இடைவெளியை மூடும். பின்னால் உள்ள பற்களுக்கு 'கேப்' போடுவதன் மூலம் பற்களை முகஅமைப்புக்கு ஏற்ப மாற்றலாம். ஒரே ஒரு பல்மட்டும் மிகச்சிறியதாக இருப்பது, பிறக்கும்போது ஏற்படும் குறைபாடு. அந்தப்பல்லில் வேர் சிகிச்சை செய்வதோ, கேப் போடுவதோ முடியாது. அந்தப் பல்லை எடுத்துவிட்டு அவ்விடத்தில், 'இம்பிளான்ட்' வைத்து மற்ற பற்களின் அளவிலே புது பல் பொருத்தி விடலாம்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551