PUBLISHED ON : ஜூன் 16, 2013

பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில், மஞ்சள் காமாலை, நிமோனியா, மூளைக் காய்ச்சல், டெட்டனஸ், தொண்டை அழற்சி நோய், கக்குவான் இருமல் போன்ற, பல்வேறு நோய்களுக்கு, தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், தான் துவக்கி உள்ள, முதியோருக்கான தடுப்பூசி மையம் குறித்து விளக்குகிறார், சென்னை மருத்துவக் கல்லூரி, முதியோர் மருத்துவ துறையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர் நடராஜன்.
மனிதர்களுக்கு வயது ஆக ஆக, நோய்களை எதிர்த்துச் செயல்படும், ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் பல செல்களின் செயல்திறன் குறைகிறது. பல்வேறு நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைய காரணமாக உள்ளன. இதனால், முதியோர், தொற்று நோய்களுக்கு எளிதில் ஆளாகின்றனர்.
சத்தான உணவுகளுடன், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் பச்சை பயிறு போன்ற, பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். இவற்றுடன், சில தடுப்பூசிகளின் மூலமும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முதுமையில், தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம்.
ப்ளூ காய்ச்சல்: இக்காய்ச்சல் வராமல் இருக்க, செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான, மழை மற்றும் குளிர்காலத்தில், ஆண்டிற்கு ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நிமோனியா சளி: இது, இருமல், சளியோடு, உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் ஒருவகை தொற்று நோய். இதை தடுக்க, 50 வயதிற்கு பின், ஒரு முறை இதற்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டால் போதும். சிலருக்கு, தேவையை பொறுத்து, 5 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஒருமுறை இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டி வரும்.
இவற்றுடன், கவனக் குறைவாக இடித்துக் கொள்வது போன்றவற்றால் உடம்பில் ஏற்படும் காயங்களால், ரத்தம் கெடாமல் இருக்க, (செப்டிக்) 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 'டெட்டனஸ்' தடுப்பூசியும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, டைபாய்டு காய்ச்சலுக்கும் மற்றும் தேவையின் அடிப்படையில், மஞ்சள் காமாலைக்கும், முதியோர், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
கூட்டு குடும்பங்கள் குறைந்துவரும் இன்றைய சூழலில், முதியோர், நோய்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டு, உடல்நலத்தை பாதுகாப்பது அவசியமாகிறது. முதியோர் நலனை கருத்தில்கொண்டு, அவர்களுக்கான தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது.
டாக்டர் நடராஜன்,
முதியோர் நல மருத்துவர், சென்னை. 95000 78740