PUBLISHED ON : ஜன 27, 2013
நான் இன்ஹேலரை தொடர்ந்து ஆறுமாதங்களாக பயன்படுத்துகிறேன். இதனால் இருதயத்தில் பாதிப்பு ஏற்படும் என, கூறுகின்றனர். இது உண்மையா?
இன்ஹேலரை தொடர்ந்து பயன்படுத்துவதால், நெஞ்சுவலி மற்றும் இருதயத்தில் பாதிப்பு ஏற்படாது. உலகளவில் இன்று பல நுரையீரல் நோய்களுக்கு மருத்துவர்கள் 'இன்ஹேலரையே' பரிந்துரை செய்கின்றனர். இன்ஹேலரால் நம் நுரையீரலுக்கும், இருதயத்திற்கும் மற்றும் நம் உடலின் எந்த உறுப்புகளுக்கும் ஒருபாதிப்பும் ஏற்படாது. எனவே, உங்கள் ஆயுள்காலம் முழுவதும், பக்கவிளைவுகளே இல்லாமல் இன்ஹேலரை பயன்படுத்தலாம்.
எனது 15 வயது மகனுக்கு, கடந்த 5 நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. அவனை பரிசோதித்த டாக்டர், 'நிமோனியா காய்ச்சல்' என்று கூறினார். இதேபோன்ற காய்ச்சல் கடந்த 6 மாதங்கள் மற்றும் ஒரு ஆண்டுக்கு முன் அவனுக்கு வந்தது. நிமோனியா காய்ச்சல் திரும்பத் திரும்ப ஏற்பட என்ன காரணம்?
நுரையீரலில் நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக சுவாசக் குழாய் விரிந்து காணப்படும் நோய் (பிராங்க்கைடீஸ்) உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு, வயதானவர்களுக்கு, நுரையீரலில் ஏதேனும் கட்டி மற்றும் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும், மற்றும் பல காரணங்களாலும் நிமோனியா காய்ச்சல் திரும்ப ஏற்பட, அதிக வாய்ப்பு உள்ளது.
நிமோனியாவின் காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். இதற்கு பிராங்கோஸ்கோப் என்னும் கருவி, உதவியாக உள்ளது. இக்கருவியை சுவாசக்குழாயின் உள்ளே செலுத்தி, நுரையீரலுக்குள் உள்ள பிரச்னையை மிகவும் தெளிவாக கண்டறிய முடியும். மேலும், மார்பக சி.டி., ஸ்கேனும் உதவியாக உள்ளது.
வீசிங் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு, நுரையீரலில் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டால், அது நிமோனியாவின் அறிகுறியாகவே தோன்றும். ஆகையால் நிமோனியா வருவதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், நிமோனியா திரும்ப வருவதை தவிர்க்க முடியும்.
எனது 40 வயது நண்பருக்கு, நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதற்கான நவீன மருத்துவ சிகிச்சை பற்றி கூறுங்களேன்?
உலகளவில், மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, நுரையீரல் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளோர், மாசடைந்த சூழலில் வேலை பார்ப்போர், பிளாஸ்டிக் மற்றும் குப்பையை அதிகம் எரிக்கும் சுற்றுச் சூழலில் வசிப்போர், விறகுஅடுப்பு பயன்படுத்துவோர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்க, அதிக வாய்ப்பு உள்ளது.
நுரையீரல் புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இந்நோயின் தன்மையை கண்டறிந்து, அதற்கு ஏற்ப, சிகிச்சை செய்ய வேண்டும். சிலருக்கு ஹீமோதெரபி தேவைப்படும். சிலருக்கு ரேடியோதெரபி தேவைப்படும். சிலருக்கு இரண்டுமே தேவைப்படும்.
புற்றுநோயின் தீவிரத்திற்கு ஏற்ப அறுவை சிகிச்சை செய்யலாம். புற்றுநோயின் தன்மை 'ஸ்டேஜ் 3ஏ' அல்லது அதற்கும் குறைந்த நிலையில் இருந்தால் மட்டுமே, அறுவை சிகிச்சை பலனளிக்கும்.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147