PUBLISHED ON : ஜன 27, 2013
எனக்கு சைனஸ் தொல்லை உண்டு. இதனால் பல்வலி வருமா? மற்ற பல் வலிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
'சைனஸ்' என்பது கன்னத்தின் இருபுறமும் இருக்கும் காற்று நிரம்பிய பகுதி. இதனுள் அடைப்பு ஏற்படும்போது, ஒருவித அழுத்தம் உருவாகிறது. இதனால் 'சைனசில்' வீக்கம், வலி ஏற்படும். இந்த வலி கண்ணுக்கு கீழ் இருந்து கன்னம் மற்றும் மேல்பற்கள் வரை பரவும். மற்ற பல் வலிக்கும், 'சைனஸ்' பல்வலிக்கும் உள்ள வித்தியாசம்:
எந்த பல்லிலும் சொத்தையோ, ஈறுநோயோ இல்லாமல் வலிமட்டும் இருக்கும். கன்னத்தை அழுத்தும்போது வலி அதிகமாகும். படுக்கும்போதும், எழுந்து நடக்கும் போதும், தலையை அசைத்துப் பேசும்போதும் வலிஅதிகரிக்கும். இந்த வகை பல்வலி, குறைவதற்கு 'சைனசில்' உள்ள வீக்கம் குறைய வேண்டும். முதலில் பல் டாக்டரிடம் பரிசோதனை செய்து, 'சைனசில்' இருந்து வலி வருவதை உறுதி செய்ய வேண்டும். பின், அதற்குரிய சிகிச்சை முறையை மேற்கொண்டால், 'சைனஸ்' பல்வலி முற்றிலும் குணமடையும்.
எனது முன்பற்கள் கூராக உள்ளன. ஒரு பல் சிறியதாக உள்ளது. ஒரு பல்லின் ஓரத்தில் தேய்ந்து உள்ளது. இவற்றை ஒரே சீராக மாற்றி அமைக்க முடியுமா?
பற்களின் அமைப்பை மாற்றி, சீரான பல் வரிசையை பெறுவது முகத்தின் அமைப்பையே அழகாக மாற்றும். இதை சரிசெய்ய, முதலில் எந்தெந்த பல்லில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என பரிசோதனை செய்ய வேண்டும். எக்ஸ்ரே எடுத்து பற்கள் மற்றும் தாடை எலும்பின் நிலையை அறிய வேண்டும். கூரான பற்களையும், சற்று பெரிதான பற்களையும், 'ரீகான்டூரிங்' என்னும் சிகிச்சை முறைப்படி சரியான வடிவத்திற்கு கொண்டு வரமுடியும்.
சிறிய பற்களுக்கும் தேய்ந்த பற்களுக்கும், 'செராமிக் வெனியர் கேப்' பொருத்தி சரிசெய்யலாம். இவற்றோடு சேர்ந்து பற்களுக்கு கம்பிபோட்டு, பல்வரிசையை சீரமைக்கக் கூடும். இவ்வகை சிகிச்சை முறையில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. ஒவ்வொரு பல்லாக தனித்தனியாக சரிசெய்யாமல் மொத்தமாக பல்வரிசையை மனதில் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும். இதுபோன்ற சிகிச்சைகளால் மற்ற பற்களுக்கோ, ஈறுகளுக்கோ எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆரோக்கியமான முறையில் அழகிய பற்களை பெறலாம்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்
மதுரை. 94441-54551