PUBLISHED ON : மே 07, 2023

தற்காலிகமாக ஏற்படும் 'இம்யூனிட்டி கேப்' என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காய்ச்சல், இருமல், மூச்சிரைப்பு, உடல் வலி, தலை வலி என்று பல அறிகுறிகளுடன், வழக்கமாக இருப்பதை விடவும், குழந்தைகள் மத்தியில் ஐந்து மடங்கு தொற்று பாதிப்பு அதிகமாகி விட்டது. இந்த சீசன் முடிந்தால் குறைந்து விடும் என்று தான் நினைத்தோம். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் வரையிலும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமானதே தவிர குறையவே இல்லை.
இயல்பாக வெளியில் செல்லும் போது, குறைந்த அளவு கிருமிகளின் தாக்கம் நம் அனைவருக்கும் தினமும் இருக்கும். இதை எதிர்த்து, நம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை தொடர்ந்து உருவாகும். இதே தான் குழந்தைகளுக்கும் சில வகை தொற்று தீவிரமாக இருந்தாலும், லேசான இருமல், சளி என்று பல நேரங்களில் தொற்று பாதிப்பு மிதமாகவே இருக்கும். இரண்டு ஆண்டுகளாக வெளியில் செல்லாமல் இருந்ததால், தொற்றை எதிர்க்க தேவையான எதிர்ப்பாற்றல் குழந்தைகளிடம் இல்லை.
ஒரே குழந்தை வாரம் ஒரு தொற்றால் பாதிக்கப்பட்டு, பல முறை டாக்டரிடம் அழைத்து வர வேண்டிய நிலை. இதனால், பெற்றோர், பதற்ற த்துடன், 'என் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியே இல்லையா' என்று கேட்கின்றனர்.
வைரஸ் தொற்றுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகள் தரக்கூடாது. அறிகுறிகளை வைத்து, ஆதரவு சிகிச்சை மட்டுமே தர வேண்டும். நிறைய திரவ உணவு தர வேண்டும். முடியாத பட்சத்தில் நரம்பு வழியாக திரவம் செலுத்தலாம். வீட்டிலேயே ஓய்வாக வைத்து குழந்தையை பராமரிக்க வேண்டும்.
பள்ளிக்கு செல்ல துவங்கிய பின், ஓரளவு எதிர்ப்பு சக்தியை பெற துவங்கி உள்ளனர். எதிர்ப்பு சக்திக்கு தனியாக எதுவும் செய்ய வேண்டாம். காய்கறிகள் என்றாலே கேரட், உருளைக் கிழங்கு என்று நினைக்காமல், நீர்ச்சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகள், பழங்கள், நட்ஸ் அதிக அளவில் தர வேண்டும். பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் போன்ற நாட்டு காய்கள், தயிர், இளநீர் தர வேண்டும்.
சமச்சீரான உணவு, இயல்பாக விளையாடுவது என்று இயற்கையாக குழந்தைகளை வளர விட்டாலே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
டாக்டர் சரண்யா மாணிக்கராஜ்,
குழந்தைகள் நல மருத்துவர்,
கோவை
0422 - 4040202

