தீயை அணைக்கும் முயற்சி ஹார்ட் அட்டாக்கை தடுக்கும்!
தீயை அணைக்கும் முயற்சி ஹார்ட் அட்டாக்கை தடுக்கும்!
PUBLISHED ON : மே 07, 2023

மூட்டுகளில் வலி, சர்க்கரை கோளாறு, இதயக் கோளாறுகள்... இவை, வயதானால் வருவதில்லை. பிரச்னைக்கு அடிப்படையான, 'இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' எனப்படும் இன்சுலின் எதிர்ப்பு, 30 - 40 வயதிலேயே துவங்கி விடுகிறது.
சராசரி ரத்த சர்க்கரை அளவு 5.9 - 6 சதவீதம் என்று இருப்பதே, கணையம் அதிக வேலை செய்து அலுத்து விட்டது என்பதற்கான அறிகுறி.
இது போன்று கல்லீரலில் லேசாக கொழுப்பு படிவது, ரத்த கொழுப்பு அளவில் டி ரைகிளிசரைடு சற்று அதிகமாக, நல்ல கொழுப்பு சற்று குறைவாக, யூரிக் அமில அளவு சற்று அதிகரித்து, ரத்த அழுத்தம் சராசரியை விட லேசாக உயர்ந்து இருப்பது எல்லாம், மெல்லிய கோடு போல கவனித்து பார்த்தால் மட்டுமே தெரிகிற மாற்றங்கள். ஆனால், இங்கு தான் பிரச்னை துவங்குகிறது.
என்னை பொருத்தவரை, உடலில் உள்ள இன்சுலின் சரியாக வேலை செய்யாமல்
இருப்பதால், உடல் உறுப்புகளில் தீயால் மெதுவாக சுடுவதால் ஏற்படும் காயம் போன்ற மாற்றம் அழற்சியாய் வெளிப்படும்.
இது போன்ற லேசான அறிகுறிகளை பார்த்தவுடன், நாம் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தீக்காயத்தை அணைப்பதற்காக இருக்க வேண்டும்.
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று வாழ்க்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டால், 45 - 50 வயதில் நாம் நினைப்பது போல எதிர்பாராத பிரச்னை துவங்குகிறது. ஹார்ட் அட்டாக், பக்கவாதம் வராமல் தவிர்க்கலாம். வயதானால் வரும் பல உடல் பிரச்னைகள் வராது.
கொரோனா பரவலுக்குப் பின், சர்க்கரை கோளாறு பாதிப்பு அதிகமாக உள்ளது. 30 வயதிற்கு மேல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிப்பது நல்லது.
காரணம், சராசரி ரத்த சர்க்கரை அளவு 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மாற சிலருக்கு பல ஆண்டுகள் ஆகலாம்; சிலருக்கு ஆறு மாதங்கள் ஆகும். நம்மால் இதை கணிக்கவே முடியாது.
டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், நாளமில்லா சுரப்பிகள் சிறப்பு மருத்துவர், சென்னை

