தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வாட்டும் செல்பி மோகம்!

வாட்டும் செல்பி மோகம்!

வாட்டும் செல்பி மோகம்!


PUBLISHED ON : அக் 02, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செல்பி என்றால் என்ன? என்று யாரிடமும் கேட்டு விட வேண்டாம். வேற்றுகிரகவாசியை போல் பார்க்க ஆரம்பித்து விடுவர். அந்தளவுக்கு, செல்பி மோகம், அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அமெரிக்க புகைப்படக் கலைஞரான ராபர்ட் கொரனலிஸ் தான், முதன் முதலில் செல்பி புகைப்படத்தை எடுத்தவர். இது, திட்டமிட்டு நடந்த செயல் அல்ல. 1839ம் ஆண்டு, கேமராவை வைத்து, அவரே புகைப்படம் எடுக்க முயன்றார். லென்ஸ் மூடியை சரியாக கழற்ற முடியாததால், முயன்று பார்த்தார். ஒரு வழியாக லென்ஸ் மூடியை கழற்றியதும், கேமரா புகைப்படம் எடுத்தது. தன்னை தானே புகைப்படம் எடுக்கும் செல்ப் போர்ட்ரைட் என்பதன் சுருக்கமே, செல்பி என அழைக்கப்படுகிறது. இதன் தமிழாக்கம், தாமி என கூறப்படுகிறது.

இந்தியாவில் அதிகம்

செல்பி எடுப்பதால், தோலில் பாதிப்பு ஏற்படும் என, தோல் நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். செல்பி எடுக்கும் போது அதில் வெளியாகும் நீல நிற ஒளி, தோல் நலனையும், வெளியாகும் எலக்ட்ரோ மெக்னடிக் கதிர்கள், மரபணுவை பாதிக்குமாம். செல்பி பழக்கம் ஒரு வித மனோ வியாதி என ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு, உலகம் முழுவதும், 27 பேர் செல்பி எடுக்கும் போது இறந்ததாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஓடும் ரயிலில் எடுப்பது, ரயில் வரும் போது, அதன் அருகில் நின்று எடுப்பது, வனப்பகுதிகளில் உலவும் விலங்குகளின் அருகில் நின்று எடுப்பது, நீர்வீழ்ச்சியின் பக்கத்தில் எடுப்பது போன்ற செயல்கள் அரங்கேறுகின்றன. பல சம்பவங்களில், இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். ஓரிடத்தில் நான்கு பேர் கூடுகிறார்கள் என்றால், வாங்க ஒரு செல்பி எடுப்போம் என்ற பேச்சு தான் மேலோங்குகிறது.

கூகுள் அறிக்கை

சமீபத்தில், கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாளைக்கு, 11 மணி நேரத்துக்கு மேல் அலைபேசியில் மூழ்கி கிடப்போர், சராசரியாக, 14 செல்பி,

16 புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளை எடுக்கின்றனர். 21 முறை சமூக வலைதளங்களை பார்வையிட்டு, 25 எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். பதின் வயதினர், சராசரியாக, ஒரு நாளில், நான்கு செல்பி, ஆறு புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகளை எடுக்கின்றனர் என தெரிவித்துள்ளது. உலகப் பிரபலங்களும் இதில் விதிவிலக்கு அல்ல.

செல்பி எடுப்பது, பேஸ்புக், இன்ஸ்டகிராம், மம்லர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். பலர் சாகசத்துக்காக உயிரை பணயம் வைத்து செல்பி எடுப்பது சகஜமாகி வருகிறது. கடைசியில், உயிரிழப்பில் போய் முடியும் போது சோகம் ஏற்படுகிறது. பல இடங்களில் செல்பி எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கை போர்டுகள் வைக்கும் அளவுக்கு இருக்கிறதென்றால், இதன் மோகத்தை என்ன செய்வது.

பாதுகாப்பு சிறந்தது

ஆகச்சிறந்த அறிஞர்கள் வந்து சொன்னாலும், செல்பியை கட்டுப்படுத்த முடியாது தான். நமக்குள்ளே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த செல்பி நமக்கு முக்கியமா? என்பதையும், இடத்தையும் நினைவில் கொள்வது சிறந்தது. இதில் சாகசம் செய்து என்ன கிடைத்து விடப் போகிறது. கிடைக்கும் லைக்குக்காக ஆசைப்பட்டு, வாழ்க்கையை தொலைத்து விட வேண்டுமா? பாதுகாப்பான இடத்தில், பாதுகாப்பான சூழலில் செல்பி எடுப்பது தவறில்லை. சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போது, அற்ப சந்தோஷத்துக்காக ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன...?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us