PUBLISHED ON : அக் 27, 2024

ஜலதோஷம் ஏற்பட்டால், மூக்கின் இரு பக்கமும் பிசுபிசுப்பாக சளி வழியும். இது பொதுவான விஷயம். சிலருக்கு தலைவலி, கழுத்து வலி, காய்ச்சலுடன் ஒரு பக்க மூக்கின் வழியாக மட்டும் நீர் வழியலாம். இதுவும் ஜலதோஷம் தான், இரண்டொரு நாளில் சரியாகி விடும் என்று விட்டு விடுவோம்.
இது தவறு. மூக்கையும், மூளையையும் பிரித்துக் காட்டுவது மெல்லிய எலும்பு. கவனக்குறைவால் தலையில் இடித்துக் கொண்டால், இந்த மெல்லிய எலும்பில் லேசாக விரிசல் விழலாம். தலையில் எந்தப் பகுதியில் அடிபட்டாலும் இப்பிரச்னை வரலாம்.
இதன் வழியாக, மூளையில் கட்டியுள்ள திரவம் அழுத்தம் அதிகமாகும் போது, ஒரு பக்க மூக்கின் வழியே வழியும். இந்த திரவம் சளி போன்று பிசுபிசுப்பாக இல்லாமல் தண்ணீர் போன்று இருக்கும். துணியால் துடைத்தால் கறை படியாது.
இருமல், தும்மல் வரும் போது அழுத்தம் ஏற்பட்டு, விரிசல் பெரிதாகி திரவம் வழியலாம்.
சிலருக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டை வலியுடன் அவ்வப்போது நீர் வழியும்.
திரவம் தொண்டையில் வழிந்து உறங்கவே முடியாத அளவிற்கு இருமலை ஏற்படுத்தலாம்.
இப்பிரச்னை ஆண்களை விட, உடல் பருமன், கழுத்தின் நீளம் குறைவாக உள்ள பெண்களுக்கு இயல்பாகவே மூளையில் திரவத்தின் அழுத்தம் அதிகமாக இருப்பதால், அதிகம் பாதிக்கும்.
கண்களில் உள்ள திரவத்தின் அழுத்தம் அதிகமாகும் போதும், இந்த விரிசல் சற்று பெரிதாகி, நீர் ஒழுகலாம்.
இந்த திரவத்தின் வழியாக பாக்டீரியா கிருமிகள் எளிதாக மூளைக்கு செல்லவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாக முடியலாம். மூக்கின் வழியாக நீர் வழிவதை, 'சி.எப்.எஸ்., லீக்' என்று சொல்லுவோம்.
ஒரு பக்க மூக்கின் வழியாக நீர் வழிந்தால், மூளையில் உள்ள திரவமா என்பதை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும். இந்த திரவம் எலும்பை கரைக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து திரவம் வழிவதால், எலும்பு இன்னும் பலவீனமாகலாம்.
மருந்துகளால் பலன் இல்லாவிட்டால், ஸ்கேன் செய்து, எந்த அளவு விரிசல் உள்ளது என்பதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்யலாம்.
மூக்கின் வழியாக எண்டோஸ்கோபி உதவியுடன் அருகில் இருக்கும் திசுக்களை எடுத்து விரிசலை மூடலாம். தொடையில் இருக்கும் சதையை எடுத்தும் வைக்கலாம்.
இதில் நோயாளிக்கு வலி அதிகமாக இருக்காது; சில நாட்களுக்கு மூக்கடைப்பு இருக்கும். ஒரு மாதம் வரை மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்.
குழந்தைகளுக்கு இப்பிரச்னை வருவது அபூர்வம். சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே மூளை, மூக்கை வேறுபடுத்தும் எலும்பு சரியாக மூடாமல் இருந்தால், அது வழியாக மூளையின் திரவம் மூக்கில் இறங்கலாம்.
டாக்டர் சுந்தர் கிருஷ்ணன்,காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர், சென்னை 95000 40702, 95001 96702krishnahospitals@gmail.com