
வள்ளி, கோபால்பட்டி: பிரசவத்திற்கு பின் திடீரென மூல நோய் தாக்கம் உள்ளது. இப்பாதிப்பில் விடுபடவும், வராமல் இருக்கவும் ஆலோசனை கூறுங்கள்.
குறித்த நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, கார வகை உணவு அதிகம் எடுத்தல், செரிமான பிரச்னை, உடல் சூடு இவற்றால் ஆசனவாயில் ஏற்படும் பாதிப்பு மூல நோயாகிறது. இரவில் மந்தமான உணவை தவிர்க்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க பால் உணவு அவசியம். முள்ளங்கி சாறு 30 மி.லி., அளவில் எடுத்து பச்சையாகவோ, கொதிக்க வைத்து ஆற வைத்தும் சாப்பிடலாம். மணத்தக்காளி, குப்பைமேனி கீரை வேக வைத்த நீரை குடிக்கலாம். கருணை லேகியம், திரிபலா சூரணம், ரச கந்த மெழுகு சாப்பிடுவதால் பாதிப்பு குறையும். அதிக பாதிப்பு ஏற்படும் போது மருத்துவர் ஆலோசனையும் அவசியம்.-
- டாக்டர் முத்துகருப்பன், பொதுமருத்துவர், நத்தம்
வீ. ரஞ்சனி, உத்தமபாளையம்: என்னுடைய தந்தைக்கு இதய நோய் இருந்தது. எனது மகனுக்கு இதயநோய் வரும் வாய்ப்புள்ளதா...
ஹார்ட் அட்டாக் அல்லது இதய நோய்கள் ஏற்படுவதற்கு மன உளைச்சல், படபடப்பு, பயம் கொள்ளுதல், கோபம் உள்ளிட்ட பல விஷயங்கள் காரணங்களாகும். மன இறுக்கம் மிக முக்கிய காரணம். படபடப்பு, இடது கை வலி, இடது மார்பு வலி, தலைசுற்றல் ஆகியவைகள் வந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என உறுதியாக கூற முடியாது. இதுபோன்ற அறிகுறி இருந்தால் , பதட்டம் அடையாமல் இதய நோய் சிறப்பு பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக கொழுப்பு, புகைப் பழக்கம், அளவுக்கதிகமான மது அருந்துதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தினால் இதய நோயிலிருந்து தப்பலாம். பரம்பரையில் பெற்றோர்களுக்கோ, உடன்பிறந்தவர்களுக்கோ இதய நோய் இருந்தால், உங்கள் பிள்ளைக்கு இதய நோய் வருமா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.
இதய நோய்களை தவிர்க்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தல் நலம். இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் சையது சுல்தான் இப்ராகிம், சர்க்கரை, இதய நோய் சிறப்பு நிபுணர், கம்பம்
க.சண்முக வடிவேல், சிவகங்கை: எலி காய்ச்சல் என்றால் என்ன; அது வராமல் எவ்வாறு தற்காத்துக் கொள்வது.
வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்கள், எலி போன்ற கொறித்துண்ணிகள், பண்ணை விலங்குகள், நோய் வாய்ப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாக பரவக் கூடியவை தான் லெப்டோஸ்பிரோசிஸ் என்கிற எலி காய்ச்சல் நோய். இந்த நோய் ஜூன் முதல் ஜனவரி வரை அதிகமாக பரவக்கூடும்.
தீவிர காய்ச்சல், கடுமையான உடல் வலி, உடல் சோர்வு, கண் எரிச்சல், மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். கடுமையான காய்ச்சலுடன் கூடிய உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். இந்த நோய் இருப்பதை உணர்ந்தால் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். சுத்தமான பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்ற வேண்டும். வீட்டில் எலி உள்ளிட்ட உயிரினங்கள் வராதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர் அ.அகமது கலீல், உதவி பேராசிரியர், பொது மருத்துவம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
செல்வகுமார், ஸ்ரீவில்லிபுத்துார்: எனக்கு 52 வயது ஆகிறது. தொழில் ரீதியாக தினமும் அதிக நேரம் அலைபேசி பேச வேண்டிய நிலை உள்ளது. சமீப காலமாக காது, தலைவலி ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்
அலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவதால் காதின் செவி நரம்பு சோர்வடைய துவங்கும். இதனால் நரம்பு தலைவலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடனடியாக ஆடியோ கிராம் டிரஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் எந்த அளவிற்கு நரம்பு சோர்வு உள்ளது என்பதை கண்டறிய முடியும். அந்த அளவினை பொறுத்து தான் மருத்துவம் செய்ய முடியும். ப்ளூடூத் ஹெட்செட் பயன்படுத்துவதால் 50 வயதில் வரவேண்டிய நரம்பு தலைவலி தற்போது 20 வயதுள்ள இளைஞர்களுக்கும் வருகிறது. இதனால் நரம்பு சோர்வடைவதால் நரம்பு தலைவலி அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆடியோ கிராம் டெஸ்ட் செய்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர் கனகவேல், காது, மூக்கு, தொண்டை நோய் சிறப்பு நிபுணர், ஸ்ரீவில்லிபுத்துார்