PUBLISHED ON : செப் 02, 2020

கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் மூன்று வகையினரைப் பார்க்கிறோம். முதலாவது, அறிகுறிகள் இல்லாமல் பாதித்தவர்கள். பாதிப்பில் இருந்து இவர்கள் வெளியில் வந்த பின்பும், பாதிப்பால் ஏற்படும் பிந்தைய அறிகுறிகளும், பெரிதாக வெளியில் தெரிவதில்லை.
இரண்டாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைரஸ் நோயாளி களில், அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள். இவர்களில் சிலருக்கு பாதிப்பு சரியான பின்பும், தொடர்ந்து செயற்கை சுவாசம் வேண்டியிருக்கிறது.
பரிசோதனை
அப்படிப்பட்டவர்களுக்கு, அவர்களின் தேவைக்கு ஏற்ப, 1 லிட்டர், 2 லிட்டர் என்று, ஆக்சிஜன் சிலிண்டருடன், வீட்டிற்கு அனுப்புகிறோம். மூன்றாவது வகையினர், ஆக்சிஜன் கொடுத்தாலும், அது போதாமல், 'வென்டிலேட்டர்' உதவி தேவைப்படுபவர்கள். மிகக் குறைவான சதவீதத்தினரே இது போல இருந்தாலும், இவர்களை பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது, சவாலான விஷயமாகவே உள்ளது.
நுரையீரலில் கிருமி பாதிப்பு இருந்து, முற்றிலும் வெளியில் வந்தவர்களும், 'பல நேரங்களில் நடக்கும் போது, இரண்டு பக்கமும், மார்பு பகுதியில் எதையோ துாக்கிக் கொண்டு நடப்பதைப் போன்ற உணர்வு இருக்கிறது; பயமாக உள்ளது...' என்று சொல்கின்றனர்.
இந்த பிரச்னையுடன் வருபவர்களுக்கு, தேவையான பரிசோதனைகள் அனைத்தையும் செய்து பார்த்தால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், இயல்பாகவே இதயம், நுரையீரல் செயல்படுகிறது; ஆனாலும், மார்பு பகுதியில் கனமான உணர்வு இருப்பதாக கூறுகின்றனர்.
'கொரோனா வருவதற்கு முன், 5 கி.மீ., 10 கி.மீ., நடப்பேன்; ஆனால், தொற்று சரியான பின், 500 மீட்டர் நடந்தாலே மூச்சு இரைக்கிறது...' என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். இவர்களிலும் சிலருக்கு சில வாரங்கள் செல்ல செல்ல, இந்தப் பிரச்னை சரியாகி விடுகிறது. சிலருக்கு நிரந்தரமாகவே சுவாசப் பிரச்னை இருக்கிறது; அத்துடனேயே வாழ வேண்டியுள்ளது.
இவர்களில், இணை உடல் கோளாறுகள் இருந்தால், மிக மோசமாக நுரையீரல் பாதிக்கப்படுகிறது. அப்படி இல்லாதவர்களுக்கும், நுரையீரல் பிரச்னை வருகிறது. குறிப்பாக, நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்ட இளம் வயதினருக்கு, வேறு எந்த உடல் கோளாறு இல்லாவிட்டாலும், நுரையீரல் பாதிப்பு நிரந்தரமாக இருக்கிறது.
அலட்சியம் வேண்டாம்
கொரோனா பாதித்தால், ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது போன்ற பிரச்னைகள் இருக்கும் என்பதால், பக்கவாதம், இதய கோளாறுகள் வருவதும் அதிகமாகவே உள்ளது. தீவிர நோய் தொற்றி லிருந்து மீண்டவர்களுக்கு, மன ரீதியாகவும் பல பிரச்னைகள் வருகின்றன. எதிர்ப்பணுக்கள் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை தான் இருக்கிறது.
அதனால், 'ஒரு முறை வந்தவருக்கு, நோய் தொற்று மீண்டும் வரலாம்' என, சர்வதேச அளவில் சொல்லப்படுகிறது. ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை, இதுவரையிலும் அப்படி எதுவும் நடக்கவில்லை; ஆனாலும், வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாகக் கூற முடியவில்லை என்பதால், அதிகபட்ச கவனத்துடன் இருப்பது பாதுகாப்பானது.
அடுத்த ஆறு மாதங்களுக்கு சத்தான உணவு, தினசரி உடற்பயிற்சி செய்து, தலைவலி, தலை சுற்றல், அயர்ச்சி போன்ற எந்த அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
டாக்டர் ஆர்.எபனேசர்,
தலைவர், கிரிட்டிக்கல் கேர் பிரிவு,
அப்பல்லோ மருத்துவமனை, வானகரம், சென்னை.
044 - 30207777

