இடது தோள்பட்டை வலிக்கு இருதய கோளாறு மட்டும் காரணமல்ல!
இடது தோள்பட்டை வலிக்கு இருதய கோளாறு மட்டும் காரணமல்ல!
PUBLISHED ON : செப் 04, 2020

''தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வதால், தோள்பட்டை வலி நம்மை விட்டு நீங்கும்,'' என, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தோள்பட்டை சிறப்பு நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
தோள்பட்டையில் சிலருக்கு தொடர்ந்து வலி இருக்கிறது. எல்லா தோள்பட்டை வலிகளும், இருதயம் தொடர்புடையவையா?
இடது தோள் பட்டையில் வலி ஏற்படுவது, இருதயக்கோளாறு காரணமாக இருக்கலாம் என்ற விழிப்புணர்வு, மக்களிடையே உருவாகி வருவது, வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். எல்லா தோள்பட்டை வலிகளுக்கும், இருதய கோளாறு காரணமல்ல. இருதயப்பகுதிகளில் வலி, நெஞ்சில் படபடப்பு, வியர்வை, மூச்சுவிடுதலில் சிரமம் இருந்தால், அது இருதயம் தொடர்பானது என, உணர்ந்து கொள்ளலாம்.
வெறும் தோள்பட்டை வலி ஏன் ஏற்படுகிறது?
கழுத்துப்பகுதி எலும்புகளுக்கு இடையே நரம்பு அழுத்தம், எலும்பு தேய்மானங்களால் தோள்பட்டை பகுதிகளில் வலி உருவாகும். இதை, உரிய பரிசோதனைகளின் வாயிலாக உறுதிப்படுத்திக் கொண்டு மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்.
சிலருக்கு, இரவு நேரங்களில் தோள்பட்டைகளில் கடும் வலி ஏற்படுகிறது. அவர்களுக்கான தீர்வு என்ன?
இப்பிரச்னையால், இரவுகளில் துாக்கத்தை தொலைத்து விட்டு பலர் அவதிப்படுவது உண்மைதான். அவர்களால் உடலை திருப்பி, படுக்க முடியாத நிலை கூட உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோயால் அவதிப்படும் நபர்கள், இச்சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு தோள் பகுதியில், தசை நார்கள் இறுகி காணப்படும். அதனால், அதிக வேதனை ஏற்படும். இதற்கு பிசியோதெரபி சிகிச்சை நல்ல பலன் தரும்.
தோள்பட்டையில் நுண்துளை அறுவை சிகிச்சை ஏன் மேற்கொள்ளப்படுகிறது?
சிலர் விபத்து காரணமாகவோ, கீழே விழுந்து விடுவதாலோ, தோள்பட்டை தசை நார் கிழிந்து விடும். இவர்கள், நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு, பூரணமாக குணம் பெறலாம். விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் தோள்பட்டை பிரச்னைகளுக்கும், நல்ல தீர்வு உள்ளது.
கால் மூட்டுவலி வராமல் தடுக்க என்னதான் வழி?
தகுந்த சத்துணவு உண்பதால் மூட்டு வலி, வராமல் தற்காத்து கொள்ளலாம். குறிப்பாக, கால்சியம் சத்து மிகுந்த கீரை வகைகள், ராகி, சோயா, பால், தயிர், மீன் ஆகியவற்றை உண்ண வேண்டும்.
நீரிழிவு, சைனஸ், டி.பி., உள்ளிட்ட நோய்களுக்காக, நீண்டநாள் மருந்து எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு, எலும்புகள் பாதிப்பு ஏற்படுமா?
இவர்களுக்கு எலும்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு எலும்பின் அடர்த்தி, குறைந்து காணப்படும். அவர்கள் உரிய பரிசோதனை செய்து கால்சியம், வைட்டமின் மருந்துகளை உண்பதால் குணமடையலாம்.
தற்போதைய சூழலில், நோய் எதிர்ப்பு சக்திக்காக மருந்துக்கடைகளில் பலர், கால்சியம் சத்து மாத்திரை வாங்கி உண்ணுகின்றனர். இது சரியானதுதானா?
இல்லை. நமது உடலில் கால்சியம் சத்து எந்தளவு உள்ளது என்பதை, தகுந்த பரிசோதனைகள் வாயிலாக தெரிந்து கொண்டு, தகுந்த மருத்துவரின் உதவியோடு மருந்து, மாத்திரைகளை உண்ணுவதே சரி.
டாக்டர் கார்த்திகேயன்
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
98430 89532
karthikeyanortho@gmail.com
வாசகர்களே... இதய நோய்கள் குறித்த உங்கள் சந்தேகங்களை 9894009238 எனும் எண்ணில் 'டெலிகிராம் ஆப்' வாயிலாக அனுப்புங்கள். பதில் அளிக்க மருத்துவ நிபுணர்கள் காத்திருக்கின்றனர்.

