PUBLISHED ON : ஆக 25, 2024

காலையில் எழுந்ததும் அனைவரும் பல் துலக்குகிறோம். இரவில் உறங்க செல்வதற்கு முன், எத்தனை பேர் இதை செய்கிறோம்; 100 பேரில் இருவர் கூட செய்வதில்லை.
பகல் முழுதும் நாம் சாப்பிடும் உணவுத் துகள்கள் வாயில் அப்படியே தங்கி, பற்களில் சொத்தை, ஈறுகளில் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. காலையில் எழுந்ததும், 90 சதவீதம் பேருக்கு, சர்க்கரை கலந்த காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. அதிலும், ஒரு டம்ளர் காபிக்கு இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிப்பவர்கள் இருக்கின்றனர்.
உணவுப் பழக்கம் முன்பு போல நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் என்று சமைக்காமல் இயற்கையாக சாப்பிடுவதும் கிடையாது. எல்லாமே சமைத்த உணவுகள். இவை தவிர, நுாடுல்ஸ், பீட்சா, பர்கர் என்று சுத்திகரிக்கப்பட்ட, அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுகிறோம்.
நாள் முழுதும் இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு, இரவில் பல் துலக்காமல் படுக்கும் போது, உணவுத் துகள்கள் பற்களின் மேல் படிகின்றன.
மதிய உணவுக்குப் பின், கைகளால் பற்களை தொட்டுப் பார்த்தால் வெள்ளையாக படிமம் இருப்பதை உணரலாம். பற்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இதற்கு பெயர், 'பிளாக்!' இது பற்களின் மேல் படிந்து, இறுகி, படிமம் போலாகி விடும். கீழ் வரிசை பற்களை நாக்கால் தடவினால், மென்மையான ஒரு அடுக்கு பல்லின் கீழ் ஈறுகளின் நுனியில் படிந்திருக்கும். அழுக்கு சேர்ந்து உருவாகியிருக்கும் இதற்கு 'கால்குலஸ்' என்று பெயர்.
இப்படியே நீண்ட நாட்களுக்கு படிந்து இருந்தால், ஈறுகள் பலவீனமாகி, அழுத்தம் ஏற்பட்டு, வீங்க ஆரம்பிக்கும்.
மூன்றில் ஒரு பங்கு பற்கள் தான் வெளியில் தெரிகின்றன. இரண்டு பங்கு, ஈறுகளின் மத்தியில் இருக்கும் எலும்புகளின் நடுவில் உள்ளன.
சுத்தம் செய்யாவிட்டால், ஈறு இறங்கி இறங்கி, உள்ளே இருக்கும் பாகங்கள் எல்லாம் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். ஈறுகள், பற்கள் பலவீனமாகி, எலும்பு கரைந்து, பற்களைச் சுற்றி எலும்பே இருக்காது.
பல் டாக்டரிடம் சென்றால், 'ஸ்கேலிங்' எனப்படும் சுத்தம் செய்வார். அதன்பின் பற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது தெரியும். சுத்தம் செய்ததால் இடைவெளி வந்து விட்டதாக நினைப்போம். உண்மை அதுவல்ல.
இத்தனை நாட்களாக உணவுத் துகள்களால் ஏறபட்ட அழுக்கு பற்களின் மேல் படிந்திருந்தது. சுத்தம் செய்ததும் அந்த இடங்கள் எல்லாம் இடைவெளி இருப்பதாகத் தோன்றும். அழுக்கினால் மென்மையாக இருந்த பற்கள் கூர்மையாகத் தெரியும். சுத்தம் செய்த பின் அழுக்கு சேராமல், முறையாக பராமரித்தால், ஈறுகள் வளர்ந்து, இடைவெளி மூடி ஈறுகளும், பற்களும் வலிமையாகும்.
பல்வலி, வாயில் ஏதாவது பிரச்னை வந்தால் மட்டுமே பல் டாக்டரிடம் செல்கிறோம். அப்படி இல்லாமல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்தால், சொத்தை இருந்தால் ஆரம்பத்திலேயே தெரியும். சுலபமாக அடைத்து விடலாம். தாமதித்தால் பாதி பல் தான் இருக்கும். அதன்பின், 'ரூட் கேனால்' செய்ய வேண்டும். சில சமயங்களில் பல்லை எடுக்க வேண்டிய நிலையும் வரலாம்.
பற்களில் சொத்தை வருவதற்கு காரணம் பாக்டீரியா. இந்த நுண்ணுயிரி வளர்வதற்கு சர்க்கரை அதிக அளவில் உதவி செய்யும்.
சர்க்கரையை தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் கடித்து, சுவைத்து சாப்பிட்டால், வாயில் நிறைய உமிழ்நீர் சுரக்கும். இது, பற்களின் மேல் அழுக்கு சேர விடாமல் பார்த்துக் கொள்ளும்.
ஐந்து வயதில் இருந்து இரண்டு முறை பல் துலக்க பழகினால் தான், வாழ்நாள் முழுதும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
டாக்டர் ஐஸ்வர்யா அருண்குமார், பல் மருத்துவர், சென்னை & 91760 70567 ) frontierdentistschennai@gmail.com