PUBLISHED ON : ஜன 25, 2026

க ர்ப்ப காலத்தில் இயல்பை விடவும் மார்பகங்கள் பெரிதாகும். காரணம், தாய்ப்பால் சுரக்கத் தயார் நிலையில் ஹார்மோன் செயல்பாடுகள் இருக்கும்.
இந்த சமயத்தில், மார்பகங்களில் வலி, கனமான உணர்வு ஏற்படுவது இயல்பு. வறட்சி ஏற்படு வதை தடுப்பதற்காக, இயற்கையாகவே மார்பக காம்பை சுற்றியுள்ள, 'ஏரியோலா' என்ற பகுதி பெரிதாகி, ஈரப்பசையுடன் மாறும். இந்த மாற்றங்களை பார்த்து கவலைப்பட தேவையில்லை.
இதற்கு தகுந்த உள்ளாடை அணிவது அவசியம்.
அத்துடன் தோல் விரிவடைவதால் ஏற்படும் அழுத்தம், வெடிப்புகளை தவிர்க்க, வைட்டமின் - ஈ, ஹைட்ரலோனிக் அமிலம் உள்ள கிரீம்களை தடவலாம்.
வைட்டமின் - இ அதிகமுள்ள பாதாம், சியா, ஆளி விதைகள், கொலாஜன் நிறைந்த உணவுகளான முட்டை வெள்ளைக் கரு, ஆட்டு எலும்பின் உள்ளே உள்ள சதை போன்றவற்றை தினசரி சாப்பிடலாம்.
சைவ உணவில் கொலாஜன் கிடையாது. வைட்டமின் - ஈ அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், கொலாஜன் உற்பத்திக்கு உதவி செய்யும்.
இவை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுவதோடு, மார்பு பகுதியில் உள்ள தோல் விரி வடையும் போது, நெகிழ்வுத் தன்மைக்கு உதவும்.
தண்ணீர்
தாய்ப்பால் தரும் காலத்தில், வழக்கத்தை விடவும் அதிகமாக சாப்பிடச் சொல்வர். அதை விட முக்கியம், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது தான்.
தாய்ப்பாலில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தான், தாய்ப்பால் உற்பத்தியும் நன்றாக இருக்கும். இதை, பெரும்பாலான தாய்மார்கள் செய்வது இல்லை.
சுகாதாரம்
குழந்தை பிறந்த பின், மார்பகங்களை சுகாதாரமாக பராமரிப்பது முக்கியம். பம்பிங் உபயோகித்தாலும் இதே போன்ற சுகாதாரத்தை பின்பற்றுவது நல்லது.
குழந்தை பால் குடிக்கும் போது மார்பக காம்புகளில் வெடிப்புகள் விழலாம். வறட்சியாக இருந்தால், வெடிப்புகளின் வாயிலாக தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இதை தவிர்ப்பதற்காக, மார்பகங்களை ஈரப்பசை யு டன் வைத்திருக்க வேண்டும்.
வெடிப்புகள் ஏற்பட்டால், அதை குணப்படுத்த, 'லேனோலின்' சேர்ந்த கிரீம்களை தடவலாம்.
அதிக காரத்தன்மையுள்ள சோப்புகளை உபயோகிக்கக் கூடாது.
அதில் உள்ள கடினமான வேதிப் பொருட்கள், தோலில் வறட்சியை ஏற்படுத்தும்.
தாய்ப்பால் தருவதற்கு முன் மற்றும் பின், வெதுவெதுப்பான நீரில் மார்பகங்களை துடைப்பது கட்டாயம்.
கசிவு
சிலருக்கு தாய்ப்பால் கசிவு இருக்கும். இவர்கள், 'பிரஸ்ட் பேட்' பயன் படுத்தலாம். முழுமையாக நனைந்து விட்டால், வேறு பேட் மாற்றிக் கொள்ளலாம். ஈரமாகவே இருந்தால், தொற்றுகள் ஏற்படலாம்.
சிலருக்கு ஒரு பக்க மார்பில், காம்பு உள்ளேயே இருக்கும். கர்ப்ப காலத்திலேயே இதை கவனித்து, டாக்டரின் ஆலோசனையுடன் 'நிப்பிள் ஷீல்டு' அணியலாம். இதை பெரும் பாலும் யாரும் பின்பற்றுவதில்லை.
மார்பு காம்புகளில் வெடிப்பு மற்றும் தொற்று ஏற்பட்டால் வலி இருக்கும்; தாய்ப்பால் தர முடியாது; பால் கட்டிக் கொள்ளும். அப்படியே விட்டால், இதனாலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சீழ் உருவாகும்; தீவிர வலி, காய்ச்சலுடன் சிரமப்படுவர். ஒரு சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை, ஸ்கேன் வாயிலாக இதை வெளியேற்ற வேண்டியிருக்கும்.
இது போன்ற பிரச்னைகள் இருந்தால், இதற்கென்று இருக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
சமூக வலைதளங்களில் பலரும் பலவித ஆலோசனைகளை தருகின்றனர். இதை உண்மை என்று நம்பி பின்பற்றுபவர்களும் இன்று அதிகம். பாலுாட்டும் தாய்மார்கள் இதை பின் பற்றுவது, குழந்தைக்கும், தாய்க்கும் பல நேரங்களில் ஆபத்தாக முடியலாம்.
@block_B@ டாக்டர் ஸ்வாதிகா ராஜேந்திரன், மார்பக அறுவை சிகிச்சை நிபுணர், காவேரி மருத்துவமனை, சென்னை.
044 -- 4000 6000 info@kauveryhospital.com@@block_B@@

