PUBLISHED ON : ஜன 25, 2026

நாம் பரபரப்பாக வேலை பார்க்கும் வேளையில், திடீரென்று பசிக்கத் துவங்கும். நேரத்தைப் பார்த்தால், வழக்கமாக நாம் சாப்பிடும் நேரமாக இருக்கும்.
வெளியில் எப்படி நம்மை இயக்க கடிகாரம் இருக்கிறதோ, அதை போல, நம் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. அது தான் உயிரியல் கடிகாரம்.
தினசரி நிகழும் இந்த மாற்றங்களுக்கு, 'சிர்காடியன் ரிதம்' என்று பெயர்.
இதற்கு காரணமாக இருப்பவை பீரியட் ஜீன், டைம்லெஸ் ஜீன் ஆகிய இரு மரபணுக்கள்.
ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் பீரியட் ஜீன், ஒரு வகை புரதத்தை உற்பத்தி செய்யும். புரதத்தின் அளவு குறைய குறைய, இரண்டாவது ஜீனான டைம்லெஸ் ஜீன் சிதையும். இந்த சிதைவு தான், காலம் நகருவதை செல்களுக்கு உணர்த்தும். இதன் மூலம் தான் நமக்கு துாக்கம், பசி போன்ற வெளிப்படையான உடலியல் இயக்கங்களும், உடலுக்குள் ஏற்பட வேண்டிய இயக்கங்களும் சரிவர நடக்கின்றன.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில், சிர்காடியன் ரிதத்தின் அடிப்படையில் புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
உயிரியல் கடிகாரத்தின் இயக்கம் பாதிக்கப்படுவது தான், வாழ்க்கை முறை மாற்றங்களால் வரும் நோய்களுக்கு காரணம், என்று சமீபத்திய ஆய்வு சொல்கிறது.
நம் உடலை இயக்கும் உறுப்புகளின் நேரத்தை நாம் அறிந்து கொண்டால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம்.
காலை 3:00 -- 5:00 மணி: வான் வெளியில், சுத்தமான காற்று அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் மூச்சு பயிற்சி, தியானம் செய்தால், நுரையீரல் பலம் பெறும். இந்த நேரத்தில் கிடைக்கும் ஆற்றல், உணவின் மூலம் கிடைப்பதை விட சிறந்தது.
காலை 5:00 - 7:00 மணி: இந்த நேரத்தில், மலம் கழிக்க உடலை பழக்கப்படுத்தினால், பெருங்குடல் சுத்தமாகி, எந்த நோயும் வராது.
காலை 7:00 - 9:00 மணி: காலை உணவை 9:00 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். நேரம் கடந்து சாப்பிடும் போது, மற்ற உறுப்புகளின் இயக்கமும் சேர்ந்து, சுழற்சி தடைபடும்.
காலை 9:00 - 11:00 மணி: காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச்சத்தாக மாற்றும் நேரம். இந்த நேரத்தில் அதிகமான உடல் உழைப்பு, திரவ உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
காலை 11:00 - 1:00 மணி: இது இதயத்தின் நேரம். இந்த நேரத்தில் படபடப்பு, கோபப்படுதல் கூடாது. கடினமான வேலை எதுவும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.
மதியம் 1:00 - 3:00 மணி: சிறுகுடல் நேரத்தில் மதிய உணவு சாப் பிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
மாலை 3:00 - 5:00 மணி: அன்றைய நாளின் கழிவை உடலில் இருந்து பிரித்து எடுத்து, சிறுநீர் பையில் தேக்கி வைக்கும் பணி நடைபெறும்.
மாலை 5:00 - 7:00 மணி: இந்த நேரத்தில் இளஞ்சூடான உணவுகள், திரவ உணவுகள் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்வது சிறுநீரகங்களுக்கு நல்லது.
இரவு 7:00 - 9:00 மணி: இந்த நேரத்தில் மிதமான, எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
நாள் முழுதும் நம் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு செயல்பட்ட இதயம், இதயம் சார்ந்த பகுதிகள் ஓய்வெடுக்கும் நேரம். மன அழுத்தம், பதற்றம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்வுகள் கூடாது.
இரவு 9:00 - 11:00 மணி: உடலின் வெப்பத்தை சமன் செய்யும் நேரம். எண்ண ஓட்டங்கள் இன்றி, அமைதியாக உறங்க வேண்டும்.
இரவு 11:00 - அதிகாலை 1:00 மணி: இந்த நேரத்தில் இரவு உணவு சாப்பிடவே கூடாது. துாங்காமல் விழித்திருந்தால் பித்தப் பை செயல்பாடு தடைபட்டு, கற்கள் உருவாக வாய்ப்பாக அமையும்.
அதிகாலை 1:00 -- 3:00 மணி: ஆழ்ந்த துாக்கம் இருந்தால், உடலில் எந்த பிரச்னையாக இருந்தாலும், அதன் வீரியம் குறைந்து குணமாகி விடும்.
@block_B@ டாக்டர் சா.காமராஜ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு), திருச்சி. 94898 20113 drkaamaraaj@gamil.com@@block_B@@

