PUBLISHED ON : ஏப் 13, 2025

சாப்பிடும் உணவில் இருக்கும் சத்துக்களை சிறுகுடல் உறிஞ்சிய பின், சக்கையை பெருங்குடலுக்கு தள்ளும். அதிலிருக்கும் நீரை உறிஞ்சி, தேவையற்ற கழிவுகளை பெருங்குடல் வெளியே தள்ளி விடும்.
தொடர்ந்து அதிகமாக பெருங்குடல் வேலை செய்வதால், அதன் உள்பகுதியில் உள்ள தோல் போன்ற ஐந்து செல்கள், 48 மணி நேரத்திற்கு ஒரு முறை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்.
இடைவிடாது வேலை நடக்கும் இடத்தில் தவறு நடப்பது இயல்பு. செல் புதுப்பித்தல் நடப்பதால், ஏதாவது ஒரு செல் தவறாக வளர்ந்து, பெருகி கட்டியாக மாறுவது தான் கேன்சர்.
இந்த தவறு, பெருங்குடலின் இடது பக்கம் சிறியதாக மரு போன்று தோன்றும். இந்த நிலையிலேயே கண்டுபிடித்து அகற்றினால் பிரச்னை வராது. வளர விட்டால் கேன்சராக மாறி உயிருக்கே ஆபத்தாக முடியும்.
மேற்கத்திய நாடுகளில் 45 வயதில் வரும் கேன்சர் உட்பட பல நோய்கள், நம் நாட்டில் 35 வயதிலேயே வருகின்றன.
மலக்குடல் கேன்சரால், 25 வயதிலேயே உயிரிழப்பவர்களை பார்க்கிறோம். சிறிய வயது தானே, எதுவும் வராது என்று அலட்சியமாக இருப்பது கூடாது.
ஏன் இளம் வயதில்...
எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட்டு, நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து விடுகிறோம்.
இது தவிர, சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்திய உணவுகள் நல்ல பாக்டீரியாக்களுக்கு எதிரி.
கீரை, பச்சை காய்கறிகள் என்று இயற்கையான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் தான், சிறுகுடல் உறிஞ்சிய சத்துக்கள் போக எஞ்சிய சக்கை பெருங்குடலுக்கு செல்லும். நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதற்கு நார்ச்சத்து அவசியம். நார்ச்சத்து இல்லாவிட்டால், தங்கள் உணவுக்காக நம் குடலில் உட்புறம் உள்ள மியூக்கஸ் எனப்படும் கொழகொழப்பான அடுக்கை சாப்பிட்டு, நமக்கு எதிரியாக மாறி விடும்.
பரிசோதனை
மது, சிகரெட், உடல் பருமன், துாக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாததும் கேன்சருக்கான காரணிகள்.
மலப் பரிசோதனையில் ஆரம்ப நிலையில் கண்டறியலாம். மலப் பழக்கத்தில் மாறுபாடு தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம்.
ரத்த சோகைக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் தருவதற்கு முன், கண்ணுக்கு தெரியாமல் மலத்தில் ரத்தம் கசிகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
ரத்த சொந்தத்தில் 40 வயதில் கேன்சர் இருந்தால், அடுத்த தலைமுறை 30 வயதிலேயே பரிசோதிப்பது அவசியம்.
ஒரு முறை கொலோனோஸ்கோபி பரிசோதனையில் கேன்சர் இல்லை என்று தெரிந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேன்சர் வராது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கொலோனோஸ்கோபி செய்தால், வாழ்நாள் கியாரண்டி தர முடியும்.
டாக்டர் பி. பாசுமணி,
குடல், இரைப்பை சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை080622 07720info@appollohospitals.com

