ஜோதிடம் பார்ப்பது போன்றது தான் கொரோனா கணிப்புகளும்!
ஜோதிடம் பார்ப்பது போன்றது தான் கொரோனா கணிப்புகளும்!
PUBLISHED ON : மே 01, 2022

அடுத்த அலை எப்போது என்பதை, வைரசை வைத்து கணிக்கின்றனர் அல்லது பாதிப்பிற்கு பின் ஏற்படும் எதிர்ப்பு சக்தியை வைத்து பார்க்கின்றனர்; இரண்டையும் சேர்த்து யாரும் பார்ப்பதில்லை. நான்காவது அலை பற்றி வெளியாகும் கணிப்புகள் அனைத்தையும் ஜோதிடமாகத் தான் வைத்துக் கொள்ள முடியும். எந்த கணிப்பும் 100 சதவீதம் சரியாக இருக்க வாய்ப்பில்லை. கொரோனா வந்தது முதல், இதுவரை வந்த எல்லா கணிப்புகளும் இப்படித் தான் இருந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 'ஒமைக்ரான்' வகை பாதித்தது. இதற்கு முன் 'டெல்டா' வகை பாதிப்பு தந்த அனுபவத்தின் அடிப்படையில், அடுத்த ஆறு மாதங்களுக்கு புதிய வகை வைரஸ் நம்மை தாக்காது என்று கூறினர். 'செல்' என்ற புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ இதழில், கொரோனா வைரஸ் பாதித்தாலும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
தடுப்பூசி போட்டாலும் பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் ஒமைக்ரான் வீரியம் குறைந்த வைரசாக இருப்பதால், டெல்டாவால் கிடைத்ததை போல இல்லாமல், வெறும் 10 சதவீத பாதுகாப்பே கிடைக்கும் என்று ஒரு ஆய்வை வெளியிட்டு உள்ளது.
உலகம் முழுதும் முதலில் 'பிஏ1' வகை பாதித்து, தற்போது 'பிஏ2' வகை பாதிக்கிறது. நமக்கு முதலில் வந்ததே பிஏ2 வகை தான். திரும்பவும் இதே வைரஸ் வரும் என்று சொல்வது அர்த்தமற்றது. இதே தான் கடந்த முறையும் வெளிநாடுகளில் 'ஆல்பா' வந்து போய் அதன்பின் டெல்டா வந்தது; நமக்கும் அதே போன்று வரும் என்றனர். ஆனால், நமக்கு இரண்டும் சேர்ந்த வகை வைரஸ் பாதித்தது. அதேபோன்று ஒமைக்ரானிலும், பிஏ1, பிஏ2 என்ற இரண்டும் சேர்ந்தே தான் நமக்கு வந்தது.
கொரோனா பாதிப்பு வரும் போது, அதனால் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி, அடுத்த ஆறு மாதங்களுக்கு நம்மை பாதுகாக்கும் என்பது தான் நிதர்சனம்.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன்,
தொற்றுநோய் சிறப்பு மருத்துவர், சென்னை
