வழிகாட்டு நடைமுறைகளில் இனிமேலும் அலட்சியம் கூடாது!
வழிகாட்டு நடைமுறைகளில் இனிமேலும் அலட்சியம் கூடாது!
PUBLISHED ON : ஏப் 24, 2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பலவிதங்களிலும், கொரோனா வைரஸ் நம் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. அது நோயின் தீவிரமாக இருக்கலாம், பொருளாதார, வேலை இழப்பாக, நெருங்கிய சொந்தங்களை இழந்ததாக என்று எதுவாகவும் இருக்கலாம்.
நம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் ஏதோ ஒரு விதத்தில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை என்ற அளவுக்கு இருக்கிறது. ஆனால், அதை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளோம்.
உலகில் எந்த நாடும் இந்த அளவு தடுப்பூசியை செலுத்தவில்லை. அதிலும், தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக எந்த நாடும் தரவில்லை. கொரோனாவை நம்மைப் போல யாரும் எதிர்கொள்ளவில்லை என்பதே உண்மை. இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டாலும், இன்னும் சில காலம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடிசுத்தம் செய்வது, தடுப்பூசி 'பூஸ்டர் டோஸ்' போட்டுக் கொள்வது என்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
காரணம், கொரோனா வைரஸ் பற்றி இன்னும் முழுமையாக நாம் அறிந்து கொள்ளவில்லை; தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. வைரசால் பாதிக்கப்பட்டு, முழுமையாக குணம் பெற்ற, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய கோளாறுகள், சுவாச பிரச்னைகள், கேன்சர் போன்ற இணை நோய்கள் இருக்கும் முதியவர்கள், தொற்றுக்கு பிந்தைய பக்க விளைவுகளால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, ப்ளூ காய்ச்சல் போன்று உடல் சூடு, வறட்டு இருமல், மூட்டுகளில் வலி, தலைவலி என்று பொதுவான பல உடல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். தொற்றின் பாதிப்பு நுரையீரலில் அதிகம் இருந்தவர்களில் சிலருக்கு, சுவாச பைகளில் நிரந்தர தழும்புகள் ஏற்பட்டு, அதனால் சுவாசிப்பது தொடர்பான பல பிரச்னைகள் உள்ளன.
கொரோனா படிப்படியாக குறைந்து வருவது நல்ல விஷயம் தான். கொரோனா தொற்றில் இருந்து, முழுதாக வெளி வந்தவர்களும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் இருந்து விலகக் கூடாது. இன்னும் வைரஸ் நம்மை விட்டு போய்விடவில்லை; அலட்சியம் வேண்டாம்.
வைரஸ் தொற்றுக்கு பிந்தைய பக்க விளைவுகளையும், முழு கவனத்தோடு கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கொரோனா தொற்று குணமான நான்கு வாரங்களுக்கு பின், வாசனை, சுவை தெரியாமல் இருப்பது, சுவாசப் பிரச்னை, லேசான காய்ச்சல், தலைவலி என்று எந்த வித உடல் பிரச்னைகள் வந்தாலும், அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காரணம், இது கொரோனாவால் ஏற்பட்ட பக்க விளைவாகவும் இருக்கலாம்.
கொரோனாவுக்கு பிந்தைய பக்க விளைவுகளை கையாளுவதற்கு பிரத்யேக மருத்துவ மையம் உள்ளது.
டாக்டர் பிரதாப் சி ரெட்டி,
தலைவர், அப்பல்லோ மருத்துவமனை குழுமம்,
சென்னை
