PUBLISHED ON : மே 17, 2015
வெயிலின் தாக்கம் காரணமாக, வேர்க்குரு வந்து எரிச்சல்படுத்தும். இதற்கெல்லாம் என்ன தான் செய்வது?
கோடை வந்த பிறகு வியர்வை, புழுக்கம் என்பதெல்லாம் நமக்கு அழைக்கப்படாத விருந்தாளி போல் தான். கோடை நோய்களில் முக்கியமானது வேர்க்குரு. இது ஆபத்தான நோயல்ல; மருத்துவம் எதுவும் தேவைப்படாது. தானாகவே சில நாட்களில் மாறிவிடும்.
ஆயினும் இந்நோய் வராமல் தடுக்கலாம். உடலில் அதிக வியர்வை ஏற்படுவதை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்கு, கோடை காலத்தில், காலை, மாலை இரு வேளைகளிலும் குளிக்க வேண்டும்.
செயற்கை துணியால் செய்யும் ஆடைகளை, கோடை காலத்தில் முடிந்தளவு தவிர்த்தல் நல்லது. ஏனெனில், செயற்கை ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை இல்லாதது. ஆகையால், வியர்வையானது உடலில் தேங்கி, வேர்க்குரு ஏற்படும்.
பருத்தியால் ஆன ஆடைகளை பயன்படுத்தும் போது, உடலில் உண்டாகும் வியர்வையை ஆடை உறிஞ்சி கொள்ளும். அப்போது, வியர்வை தேங்காமல் சருமத்தில் வேர்க்குரு உருவாவது தவிர்க்கப்படும். வேர்க்குரு உண்டானதும், ஏற்படும் அரிப்பால் அவற்றை சொறிந்து விடக்கூடாது. அவ்வாறு செய்தால், வேர்க்குரு உடைந்து பரவ ஆரம்பித்து விடும். இக்காலத்தில், தலைக்கு குளிக்கும் போது, கற்றாலையை பயன்படுத்தலாம். கற்றாலையினுள் இருக்கும் 'ஜெல்'ஐ, முதலில் தலையில் நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து தண்ணீர் ஊற்றி, நன்கு தேய்த்து குளித்தால், உடல் சூடானது குறையும்.
வேப்பிலையை பயன்படுத்தி குளித்து வருவதும் நல்லது. வேர்க்குரு பவுடரையும் பயன்படுத்தலாம்.