PUBLISHED ON : அக் 23, 2022

பெண்களை பாதிக்கும் கேன்சரில், கர்ப்பப்பை வாய் கேன்சர் சில ஆண்டுகளுக்கு முன் வரை முதலிடத்தில் இருந்தது; அந்த இடத்தை தற்போது மார்பகப் புற்று நோய் பிடித்துள்ளது.
இதில், அதிகம் கவலை தரக்கூடிய விஷயம், மார்பக கேன்சர் பாதித்தவர்களில் 49 சதவீதம் பேர், 50 வயதிற்கும் குறைவான பெண்கள்.
குறிப்பாக சமீப ஆண்டுகளில், 20 வயது, 30 வயதில் இருக்கும் பெண்களுக்கு அதிக அளவில் மார்பக கேன்சர் வருவதைப் பார்க்க முடிகிறது.
கேன்சருக்கான காரணம் இது தான் என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், நாம் பொதுவான சில காரணிகள் இருக்கலாம் என்று சொல்கிறோம்.
அதில், உணவு, காய்கறி, பழங்களில் அதிக அளவு வேதிப் பொருட்களை பயன்படுத்துவது, உடற்பயிற்சியின்மை, 30 வயதிற்கு மேல் திருமணம், குழந்தை பெறுவது... இப்படி.
இவற்றோடு சேர்ந்து இன்னொரு காரணியும் உள்ளது...
அது 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரப்பு. இரவில் தினமும் ஆறு - எட்டு மணி நேரம் இருட்டறையில் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கும் நேரத்தில் சுரக்கும்.
நம் உடலில் சுரக்கும் ஒவ்வொரு ஹார்மோனும், குறிப்பிட்ட உடல் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.
செல்கள் புதுப்பித்தல் உட்பட உடலின் உள் செயல்பாடுகளில் தேவைப்படும் சீரமைப்பு, மெலடோனின் சீராக சுரக்கும் போது நடைபெறும்.
வாழ்க்கை முறை மாற்றத்தால், 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு வேலை நேரம் மாறி விட்டது. இரவு முழுதும் வேலை செய்கின்றனர்.
பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் குழந்தைகள், இரவு வெகு நேரம் விழித்திருந்து, 'லேப்டாப், மொபைல் போன்' என்று மூழ்கி விடுகின்றனர்.
இதனால், உடலில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு, இளம் வயதிலேயே மார்பக கேன்சர் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகி உள்ளன.
- 'செல்' மருத்துவ இதழ்
