PUBLISHED ON : அக் 30, 2022

தினசரி ஏற்படும் பதற்றம், கோபம், மன அழுத்தம் போன்றவை உயர் ரத்த அழுத்தத்திற்கான காரணம் என்று நினைக்கிறோம். நெருக்கமானவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் என்று தெரிந்தால், 'ஏன் 'ஸ்ட்ரெஸ்' ஆகுறீங்க... ரிலாக்சாக இருங்க; பிளட் பிரஷர் சரியாயிடும்' என்பது தான், நாம் தரும் அறிவுரை; நமக்கு கிடைக்கும் ஆலோசனையும் அதே தான்.
இந்த அறிவுரை, ஆறுதல் வார்த்தைகள், தினசரி நாம் சந்திக்கும் பிரச்னைகளிலிருந்து, நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நிச்சயம் உதவும். ஆனால், நீண்ட நாட்களாக இருக்கும் உயர் ரத்த அழுத்தத்திற்கு, மன அழுத்தம் தான் காரணம் என்பதற்கு, அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது.
மன அழுத்தம், பதற்றம் இருப்பவர்களை கவனித்தால், மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பர்; தினமும் செய்யும் செயல்களையும் பதற்றத்துடனேயே செய்வர்: சாதாரண விஷயத்தையும் உணர்ச்சி வசப்பட்டு சொல்வர்.
பதற்றத்துடன், மன அழுத்தத்தை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தும் போது, ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்; இதனால், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மன அழுத்தம் கட்டுக்குள் வந்தவுடன், உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் குறைந்ததும், ரத்த அழுத்தமும் சாதாரண நிலைக்கு திரும்பி விடும்.
ஆனால், அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதால், ரத்தக் குழாய்கள் சிதைவதுடன், இதயம், சிறுநீரகங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றன. பாதிப்பின் அறிகுறிகள் வெளியில் தெரியும் போது, அதற்கான மருத்துவப் பரிசோதனை செய்தால், உயர் ரத்த அழுத்தம் தெரிய வரும்.
எப்போதும் பரபரப்பாகவே இருந்தால், சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து, அன்றைய வேலைகளை திட்டமிட வேண்டும். குறிப்பிட்ட வேலை, அதிக நேரம் எடுக்கும்; ஆனால், முக்கியமில்லை என்றால், அதைத் தள்ளி வையுங்கள் அல்லது தவிர்த்து விடுங்கள்.
ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியில் விட வேண்டும். உடற்பயிற்சி, யோகா போன்றவை மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். உயர் ரத்த அழுத்தம் இருப்பது உறுதியானால், புதிதாக உடற்பயிற்சியை துவங்குவதற்கு முன், டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
- 'ஸ்போர்ட்ஸ் மெடிசின்!'
