PUBLISHED ON : ஜூன் 05, 2020

வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும், வந்து விடுமோ என்ற பயம், கர்ப்பிணிகளிடம் அதிகம் இருக்கிறது; இதுவே, அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனால், குறிப்பிட்ட தேதிக்கு முன்பே, குழந்தைகள் பிறப்பது, அதிகரித்து உள்ளது.
இந்த பதற்றம் காரணமாகவே, கடந்த சில வாரங்களாக, 'குறித்த தேதி வரையிலும் எங்களால் காத்திருக்க முடியாது; 'சிசேரியன்' மூலம் குழந்தையை எடுத்து விடுங்கள்' என்று, 36, 37 வாரங்களில் எடுக்க சொல்கின்றனர் என்று மகப்பேறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுப்பவர்கள், பல ஆண்டுகளாக, ஒரே டாக்டரிடம் ஆலோசனை பெறுவர். அதேபோல, கர்ப்பம் தரித்த நாளிலிருந்து, குழந்தை பெரும் வரை, ஒரே டாக்டரிடம் மருத்துவ ஆலோசனைக்கு செல்வர்; 90 சதவீதம் இதுதான் நடைமுறை.
இதய துடிப்பு
தாங்கள் வழக்கமாக பார்க்கும் டாக்டரை, வைரஸ் கட்டுப்பாடுகள் உள்ள நேரத்தில் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்பது தான், பயத்திற்கு முக்கிய காரணம். இன்னொன்று, நினைத்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில், வெளியில் சென்றால், வைரஸ் தொற்று வந்து விடுமோ என்ற பதற்றம் உட்பட, பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.கர்ப்பத்தின் கடைசி சில வாரங்கள், கர்ப்பிணியின் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, பனிக் குட நீரின் அளவு, சிசுவின் இதய துடிப்பு இவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், குழந்தையின் இதய துடிப்பு சீராக இருக்காது. இதனால், குழந்தை பிறந்தவுடன் அழாமல் போவது, அதனால் ஏற்படும் பிரச்னைகள் உட்பட, உடல் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.
பாதிப்பு குறைவு
கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்; ஆனாலும், பாதிப்பு அந்த அளவிற்கு இல்லை. பச்சிளம் குழந்தைகளுக்கும், மிக குறைந்த சதவீதம் பேருக்கே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நான் சொல்வது, நம் நாட்டில் மட்டும் இல்லை; சீனா, இத்தாலி போன்று கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நாடுகளிலும், இப்படித்தான் உள்ளது. அதற்காக நாம் அலட்சியமாக இருக்கவும் கூடாது.
அரசின் ஆலோசனை
ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆலோசனை நேரம் தருவது, காத்திருக்கும் இடத்தில், குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியில் நாற்காலி போடுவது உட்பட, தேவையானவற்றை செய்துள்ளோம். அறிகுறிகள் இல்லாவிட்டாலும், ஆலோசனைக்கு வரும் அனைவருக்கும் குழந்தை பிறப்பதற்கு, 48 மணி நேரம் முன்பு, வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய சொல்லியிருக்கிறது தமிழக அரசு.தாய்க்கு வைரஸ் பாதிப்பு இருந்தால், குழந்தையை தனிமைப்படுத்த வேண்டுமா, தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற சந்தேகம் இருக்கிறது.
'தாயையும், சேயையும் பிரித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை: தாய்ப்பால் கொடுக்கலாம்' என்று தான், உலக சுகாதார மையமும், 'யுனிசெப்' போன்ற சர்வதேச அமைப்புகளும் கூறுகின்றன. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம். வளைகாப்பு உட்பட, சில சம்பிரதாய முறைகளை, இந்த நேரத்தில் தவிர்ப்பது நலம்.வைரஸ் தொற்றுக்கு பயந்து, தடுப்பு ஊசி போடுவதை தவிர்க்க வேண்டாம். தடுப்பூசி போடுவதற்கு தவிர, வேறு எங்கேயும் குழந்தையை வெளியில் அழைத்து வரக் கூடாது.
உஷ்ணம்
வெயில் அதிகமாக இருப்பதால், நீர்ச் சத்து குறைவால் வரும் காய்ச்சல், குழந்தைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த சூழலிலும், காய்ச்சல் வரக் கூடாது. ஆனால், இப்போது வந்தால், 'கொரோனா'வாக இருக்குமோ என்ற பதற்றம் வரும்.போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்து, ஒரு நாளைக்கு ஆறு - எட்டு 'டயாபர்' முழுதாக, ஈரம் ஆகும் அளவிற்கு, குழந்தை சிறுநீர் கழிக்கிறதா என்று கவனிக்க வேண்டும்; அப்போது தான், போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என்று அர்த்தம்.ஊரடங்கால், குழந்தைகள் வேறு வைரஸ் தொற்றுகள் மூலம் பாதிக்கப்படுவது இல்லை. பச்சிளம் குழந்தைகள் போதிய தாய்ப்பால் கிடைக்காமல், நீர்ச்சத்து குறைவால், காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
'டெலி மெடிசின்'
தொலைபேசி வாயிலாக, மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரித்து உள்ளது.இந்த வசதியை பயன்படுத்துபவர்களின், 80 சதவீதம் பேர், இது வசதியாக இருப்பதாகவே கூறுகின்றனர்.
டாக்டர் தீபா ஹரிஹரன்,
பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்,
சென்னை
9841071435
