PUBLISHED ON : ஜூன் 07, 2020

கொரோனா என்று கேட்டு கேட்டு, எனக்கும் சலித்து போய் விட்டது; உங்களுக்கும் சலித்து போயிருக்கும்.உலகம் முழுதும், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், 55 லட்சத்திற்கும் அதிகமானோர் என்றால், அதில் பாதிக்கும் மேல், முழுமையாக குணம் அடைந்து விட்டனர்; மீதி இருப்பவர்களில் பாதிக்கும் மேல், மிதமான பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உலகம் முழுதும் இறப்பு விகிதம், 4 - 6 சதவீதம் மட்டுமே.இத்தாலி, ஸ்பெயின் போன்று, மிக அதிகம் வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடுகளிலும் தற்போது பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்தபடியே வருகிறது.
சி.டி.சி.,அமெரிக்காவில் உள்ள, முக்கியமான பொது சுகாதார அமைப்பு, சி.டி.சி., கொரோனா பாதிப்பு விபரங்களை தொடர்ந்து கவனித்து வரும் அமைப்பு இது. 'கோவிட் 19' போன்ற அறிகுறிகளுடன் ஏற்பட்ட பாதிப்பு, தற்போது குறைந்து வருவதாக இவர்கள் கூறுகின்றனர். 'அப்போது ஏன் நியூயார்க் மாகாணத்தில் வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கிறது' என்று நாம் நினைக்கலாம். இங்கு, சமீபத்தில் எடுத்த புள்ளி விபரத்தில், 18 - 45 வயதிற்குள் வைரஸ் தொற்றால் இறந்தவர்கள், வெறும், 1 சதவீதம் மட்டுமே. அதிலும், வைரஸ் பாதிப்பால் ஒரு குழந்தை கூட இறக்கவில்லை. ஏற்கனவே சிறுநீரக பிரச்னை, இதய கோளாறு, புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் இறந்து இருக்கலாம். ஆனால், கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை.
நம் நாட்டில் மக்கள் தொகை, 130 கோடி. இதில், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு இருக்கிறது. மக்கள் தொகையை ஒப்பிடும் போது, பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. ஒரு நாளில் இதய, சிறுநீரக, கேன்சர் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.நான்கு மாதங்களுக்கு முன், இந்த வைரசை எதிர்கொள்வது எப்படி என்று பயந்த அளவிற்கு, பாதிப்பு பெரிதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு, அரசின் நடவடிக்கை, மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பு, 'லாக் டவுன்' மற்றும் நமக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நாம் பயந்த அளவு, வைரஸ் நம்மை பாதித்து விடவில்லை.ஆனாலும், அடுத்த சில மாதங்களுக்கு, பரிசோதனை அதிகம் பேருக்கு செய்யும் போது, பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்; இறப்பும் அதிகரிக்கலாம்.
பொருளாதாரம்
'கோவிட் 19' உயிருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும், அதைப் பற்றி பேசி பேசி, நம் மனதையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்து இருக்கிறது. இனியும் நோயை பற்றி பேசி, நேரத்தை வீணாக்கக் கூடாது. நிறைய இடங்களில், 'லாக் டவுன்' தளர்த்தி விட்டனர். இனி, நாம் வேலை செய்ய ஆரம்பிக்கலாம். அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, சுய சுகாதாரம், போன்றவற்றை மறந்து விடக்கூடாது.கூட்டம் அதிகம் இருக்கும் இடத்திற்கு போகக் கூடாது; பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி, கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
தொற்று இதுவரை வராதவர்கள், வந்து விடுமோ என்று பயந்தபடியே இருக்க வேண்டாம். அடுத்த சில மாதங்களுக்கு, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.அதே சமயம், பயத்தை துாக்கி போட்டு விட்டு, நம் வேலைகளை பொறுப்புடன் கவனமாக செய்ய துவங்கலாம். காரணம், நாம் அனைவருமே, பொருளாதார பேரழிவை சந்தித்து கொண்டு இருக்கிறோம்.நமக்கு பண கஷ்டமா இருக்கிறது என்றால், நமக்கு மட்டும் இந்த சிரமம் என்று நினைக்க வேண்டாம். உலகத்தில் உள்ள எல்லாருக்கும், ஏதோ ஒரு விதத்தில் பண கஷ்டம் உள்ளது.மாத சம்பளம் வாங்குபவராக இருந்தால், ஊதிய பிடித்தம் உள்ளது; கம்பெனி நடத்துபவராக இருந்தால், அவரின் கம்பனி நஷ்டத்தில் உள்ளது; புதிதாக தொழில் துவங்கிய பலர், காணாமல் போய் விட்டனர்.இது போன்ற நேரத்தில், நாம் எப்படி சிந்திக்கிறோம்; நம் மனம் எவ்வளவு பக்குவமாக இருக்கிறது என்பது முக்கியம். எல்லாருமே பொருளாதார மற்றும் மன பாதிப்புகளில் இருக்கும் போது, 'அய்யோ இப்படி ஆகி விட்டதே' என்று நினைத்து குழம்பாமல், இதிலிருந்து வெளியில் வருவதை பற்றி யோசிக்க வேண்டும்.
வலி
பிரச்னைகள், அதனால் ஏற்படும் வலி எப்போதும் நமக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கும். ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஏதோ ஒரு சிரமம் இருக்கும் போது, கற்றுக் கொடுக்கும் பாடமும், ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கும். 'இதிலிருந்து நான் என்ன கற்று கொண்டேன்' என்று சிந்தித்து, செயல்பட வேண்டும்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்:என்னிடம் ஆலோசனைக்கு வரும் பெண்மணி அவர்; ஐ. டி., நிறுவனத்தில் பணி செய்தார். ஊரடங்கால் வேலை போய் விட்டது. வீட்டிலேயே என்ன செய்யலாம் என்று யோசித்து, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு, முகக் கவசம் உட்பட, தேவையான துணிகளை தைத்து கொடுக்க ஆரம்பித்தார். கடந்த, 3 மாதங்களில், 12 ஆயிரம் ரூபாயை சம்பாதித்து விட்டார்.இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.
ஒவ்வொருவரும் தங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். அவர் பலம் என்ன என்பது அவர் அவருக்கே தெரியும்; எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பது சிரமம்.போனதை எண்ணி புலம்பாமல், எதிர்காலத்தை நினைத்து பயப்படாமல், இன்று நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். இந்த இடத்திலிருந்து என்ன செய்ய முடியுமோ, அதை செய்ய ஆரம்பிப்போம்.
எதிர்மறை எண்ணங்கள் என்பது, மெதுவாக கொள்ளும் விஷம் போன்றது. நமக்கே தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று, முழுவதும் நஞ்சு தன்மைக்கு கொண்டு சென்று விடும். எனவே, உணர்வு பூர்வமாக எதையும் அணுகாமல், என்ன செய்ய முடியும் என்று யோசிக்கலாம். எந்த சிக்கலான சூழ்நிலையிலும், இரண்டு விஷயங்கள் தான் நமக்கு ஏற்படும். ஒன்று, அப்படியே உடைந்து போய் உட்காரலாம் அல்லது முன்பை காட்டிலும், வலிமையுடன் வெளியில் வரலாம். எதை தேர்வு செய்கிறோம் என்பது, நம் கையில் தான் உள்ளது.வலியை அதிகம் நினைக்காமல், வரப் போகும் நல்ல விஷயங்களை நினைப்போம்.
இது போன்ற சூழலில், அரசாங்கம் என்ன செய்ய முடியும். எவ்வளவு செய்ய முடியுமோ அதைத் தான் செய்ய முடியும்.இயற்கை பேரிடர் வரும் போது, நாம் ஒருவருக்கு ஒருவர் என்ன செய்ய முடியுமோ, அதை செய்து மீண்டு வந்ததை போன்று, இப்போதும் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்வோம்.
