"ஆஸ்பிரின் மாத்திரை எடுத்தால் பல் சிகிச்சை கூடாதா'
"ஆஸ்பிரின் மாத்திரை எடுத்தால் பல் சிகிச்சை கூடாதா'
PUBLISHED ON : செப் 29, 2013

நான் இருதய நோய்க்காக தினமும் சிறிதளவு ஆஸ்பிரின் மற்றும் ஒருசில இருதய நோய்க்கான மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இதனால் பல் சிகிச்சை செய்ய முடியாது என்பது உண்மையா?
ஆஸ்பிரின் மற்றும் அதைப் போல உள்ள மற்ற சில மாத்திரைகளை இருதய நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்வது, ரத்தம், உறைந்து இருதயம் அல்லது மூளைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே. ஆனால் இவை பல் சிகிச்சையில் சில சிக்கல்களை உருவாக்கும். பல் எடுக்கும்போதோ, வேர் சிகிச்சை செய்யும்போதோ, ஈறுகளை சுத்தம் செய்யும்போதோ, ரத்தம் வரும். சாதாரணமாக இவை 2 அல்லது 3 நிமிடங்களுக்குள் நின்றுவிடும்.
ஆனால் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வோருக்கு ரத்தம் உறைவதற்கு நேரம் அதிகமாகும். இதற்காக நீங்கள் சாப்பிடும் மாத்திரையின் பெயர் மற்றும் அளவை தெளிவாக பல் டாக்டரிடம் கூறுங்கள். அதற்கேற்ப சிகிச்சை முறையில் சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
சில ஆண்டுகள் முன்புவரை பல் சிகிச்சைக்கு சில நாட்களுக்கு முன், இந்த மாத்திரைகளை நிறுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போதுள்ள சிகிச்சை முறைகளால் நீங்கள் எப்போதும் போல ஆஸ்பிரின் மற்றும் இருதய நோய்க்காக சாப்பிடும் பிற மாத்திரைகளை சாப்பிடலாம். சிகிச்சைக்கான காலம் மற்றும் முறை சற்று வித்தியாசப்படும். ஆனால் பல் எடுப்பது, இம்ப்ளான்ட் வைத்து பல்கட்டுவது, ஈறுகள் சரிசெய்வது, வேர் சிகிச்சை போன்ற அனைத்து சிகிச்சைகளையும் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு தாராளமாக செய்யலாம்.
எனக்கு பல் சிகிச்சைக்காக எக்ஸ்ரே படம் எடுத்ததுடன், ஸ்கேன் எடுக்க வேண்டும் எனவும் டாக்டர் கூறியுள்ளார். பல் சிகிச்சைக்கு ஸ்கேன் செய்வது அவசியமா, பாதுகாப்பானதா?
பற்களுக்கு எடுக்கப்படும் எக்ஸ்ரே, பற்கள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள எலும்பில் உள்ள நோய்களையும், அதற்கு காரணமான பற்களையும் சரியாக காட்டும். எலும்பு தேய்ந்து உள்ளவர்களுக்கு எலும்பின் அகலம் மற்றும் அடர்த்தியை பொறுத்து சிகிச்சை மாறுபடும். ஒருசிலருக்கு இதனை எக்ஸ்ரே மூலம் மட்டுமே சரியாக அறிய முடியாது. அதுபோன்றவர்களுக்கு எலும்பின் அளவையும், அடர்த்தியையும் ஸ்கேன் மூலம் மிகத்துல்லியமாக அறியலாம். எலும்பு கம்மியாக உள்ளவர்களுக்கு 'டென்டல் இம்ப்ளான்ட்' வைப்பது, பல் எடுப்பது போன்ற சில சிகிச்சைகளுக்கு இந்த விபரங்கள் தேவைப்படும். உடலுக்கு எடுக்கப்படும் ஸ்கேன்களைவிட பற்களுக்கு எடுக்கப்படும், 'கோன் பீம் சி டி' ஸ்கேன்களில் கதிர்வீச்சு மிகவும் குறைவு.
எலும்புக்குள் ஏற்படும் மாற்றங்கள், நோய்கள் அல்லது கட்டி ஏதாவது இருந்தால் எக்ஸ்ரேயில் தெரியும். ஆனால் அதன் அளவு, பரவி உள்ள நிலை போன்றவை இவ்வகை 'சி டி ஸ்கேன்' மூலம் பார்க்கும்போது இன்னும் தெளிவாக தெரியும்.
அதேபோல தாடை வளர்ச்சி விகிதம் மற்றும் வளரும் முறை ஆகியவற்றை பரிசோதிக்கவும் ஸ்கேன் உதவுகிறது. பல் மற்றும் முகச்சீரமைப்பு சிகிச்சைக்கு தாடை வளர்ச்சி விகிதம் மிகமுக்கியமாக கண்காணிக்க வேண்டிய ஒன்று. எனவே எக்ஸ்ரேயின் மூலம் கண்டறிய முடியாத அல்லது எக்ஸ்ரேயில் தெரியாத சில நோய்களை தெரிந்து கொள்வதற்கும், அதற்கான சிகிச்சைகளை செய்வதற்கும் சி.டி.ஸ்கேன்கள் அவசியம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் வராது.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551
