PUBLISHED ON : செப் 11, 2016

இன்று, 'டிவி' இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். வீட்டு வேலை நடக்க வேண்டும் என்று, 'டிவி'யில் நிகழ்ச்சிகளை போட்டு விட்டு, குழந்தைகளை அதன் முன் அமர்த்துவது அதிகரித்துள்ளது. நிகழ்ச்சிகளில் வரும் கொடூர சம்பவங்கள், குழந்தைகளின் மனதில் முரட்டு தனத்தை ஏற்படுத்துகிறது என்கிறது, ஒரு ஆய்வு.
வாரத்துக்கு சராசரியாக, 20 மணி நேரம், ஒரு குழந்தை 'டிவி'யில் கழிக்கிறது என்கிறார்கள். இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் 'டிவி' தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது. இதுபோன்ற நிலையில் இருந்து, குழந்தைகளை விடுவிக்க, குழந்தைகளிடம், 'டிவி' பார்க்கக் கூடாது என்று கூறினால் மட்டும் போதாது; நீங்களும், அதை கடைபிடிக்க வேண்டும்.
டிவிக்களில் காண்பிக்கப்படும் துரித உணவுகளில், கூடுதல் சத்துகள் இருக்கின்றன என, குழந்தைகளின் எண்ணம். அதை, கட்டாயம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்திக்கின்றனர். அவற்றில், உண்மையில்லை என்பதை உணர்த்த வேண்டும்.
ஒரு நாளுக்கு, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு மேல் 'டிவி' பார்க்க அனுமதிக்கக் கூடாது. பள்ளி நாட்களில், இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில், இரண்டு அல்லது மூன்று மணி நேரமும் அனுமதிக்கலாம். குழந்தைகளின் அறிவுக்கு விருந்தாகும் நிகழ்ச்சிகளை, கட்டாயம் பார்க்க செய்ய வேண்டும். வினாடி வினா நிகழ்ச்சி என்றால், மிகவும் சிறந்தது. நேரம் கிடைக்கும் போது, வீட்டிலேயே குழந்தைகளுக்கு சில போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கி ஊக்குவிக்கலாம். இது, கற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
குழந்தைகளை 'டிவி' பார்க்க அனுமதித்து விட்டு, சமையல் செய்வதை விட, சமையலுக்கு உதவ செய்ய வேண்டும். இப்படி செய்தால், பல நல்லப் பழக்கங்கள் அவர்களிடம் வரும்.
