PUBLISHED ON : செப் 11, 2016

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. தெரிந்துக் கொள்ளவும், பெற்றோர் பலர், கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், இரண்டு அடி கொடுத்து, குழந்தைகளை உட்கார வைத்து விடுவது, பலரின் இயல்பு.
குழந்தை, ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், அதன் கவனத்தை திசை திரும்பும் வகையில், பெற்றோர் நடந்து கொள்ளலாம். உதாரணமாக, அவர்களை கவரும் விளையாட்டுகளை நாமே விளையாடலாம். அதில் குழந்தை ஐக்கியமாகி, முன்னர் கேட்ட பொருளை மறந்து விடும்.
குழந்தை நம்மிடம் சொல்ல வருவதை முழுமையாக கேட்க வேண்டும். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்றால், அவர்கள் மனதில் என்னென்ன ஒளிந்துக் கிடக்கிறது; கற்பனை திறன் எவ்வாறு இருக்கிறது என்று, அறிய முடியாமல் போகும்.
பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு, குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது, வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. பாக்கெட் மணி கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை, அவர்களிடம் உருவாக்க வேண்டும். ஒரு பிரச்னை ஏற்படும் பட்சத்தில், பிரச்னை எப்படி வந்தது; ஏன் வந்தது; என்ன தீர்வு? என்ற விஷயத்தை, தைரியமாக அணுக கற்றுக் கொடுக்க வேண்டும். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை, எப்படி கண்டறிவது என்பதையும் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று.
