PUBLISHED ON : டிச 02, 2015
ஒரு நாள், அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது, ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். ஏற்கனவே, 'தினமலர்' நாளிதழில் நான் எழுதிய கட்டுரையை படித்ததாகக் கூறினார்.
கரூரை சேர்ந்த விவசாயி ஒருவர், அவருடைய உறவினர் என்றும், அவருக்கு இதய பாதிப்பு இருப்பதாகவும் கூறினார். முனுசாமி, ௭௨, ஆனாலும், வயது ஒரு பொருட்டல்ல என்று, இன்றும் விவசாயம் செய்கிறார் என்றார். விவசாயி என்றதுமே,
என் மனம் நெகிழ்ந்தது. கட்டாயம்
அவரை குணப்படுத்த வேண்டும் என்று கருதி, வரச் சொன்னேன்.
நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறலோடு என்னை சந்தித்தார். முன்பு எடுத்த பரிசோதனை முடிவுகளை காட்டினார். அதில், 'அயோடிக்' குழாயில் அதிகளவு ரத்தக் கசிவு இருந்தது. அதுமட்டுமல்ல; நெஞ்சுக் கூட்டிற்குள் இருக்கும் மகாதமனி வீக்கமடைந்திருந்தது.
இதற்கு பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். முனுசாமியின் வயது காரணமாக, பெரிய அறுவை சிகிச்சையை அவர் தாங்குவாரா என்று அவரது குடும்பத்தார் தயங்கினர். அறுவை சிகிச்சை செய்தால், ௯௦ சதவீதம் சரியாகி, மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்றும், ௧௦ சதவீதம் ஆபத்து உள்ளது என்றும் விளக்கினேன்.
அதற்கு முனுசாமி, 'டாக்டர், என் இறுதி மூச்சு அடங்கும் வரை, விவசாயம் செய்ய வேண்டும். அதற்காகவாவது நான் உயிர் பிழைக்க வேண்டும்' என்றார் துணிவோடு.
தமனி வீக்கத்தை சரிசெய்யா விட்டால் தமனியில் கிழிசலோ அல்லது வெடிப்போ ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். அயோடிக் வால்வில் எற்படும் ரத்தக் கசிவை சரிசெய்ய வேண்டும்; இல்லையென்றால் நாளடைவில் இதய செயலிழப்பு ஏற்படும்.
எனவே, இரண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். பாதிக்கப்பட்ட அயோடிக் வால்வை எடுத்துவிட்டு செயற்கை வால்வு பொருத்தப்பட்டது; மகாதமனியில் இருந்த வீக்கத்தை சரி செய்தோம். பின், தீவிர கண்காணிப்பில் இருந்தபோது, அறுவை சிகிச்சை செய்த இடங்களிலிருந்து ரத்தம் கசிந்தது.வயதின் காரணமாக திசுக்கள் எல்லாம் மென்மையாகி விட்டதாலும், பெரிய
அறுவை சிகிச்சை என்பதாலும் ரத்தம் கசிந்தது. அதை சரி செய்ய, மீண்டும்
ஒரு அறுவை சிகிச்சை செய்தோம். சிகிச்சைக்கு பின், ஆறு நாட்களில்
வீடு சென்று, சில வாரங்களில் மீண்டும் விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டார். வயதான பின் மகாதமனி பாதிக்க, உயர் ரத்த அழுத்தம் காரணமாகிறது. சிறு வயதில் இப்பிரச்னை வந்தால், பிறவியிலேயே இணைப்புத் திசுக்களில் ஏற்படும் கோளாறுகள் காரணமாகிறது.
தமனி பாதிப்பை கண்டறிந்தவுடன் திறந்தநிலை அல்லது நுண்துளை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தமனி பாதிப்பு இதயத்திற்கு எவ்வளவு அருகாமையில் இருக்கிறது என்பதை பொறுத்து சிகிச்சை முறையை மருத்துவர் தீர்மானிப்பர். முனுசாமியை காப்பாற்றியதில் எனக்கொரு ஆத்ம திருப்தி. ஒரு விவசாயியின் உயிரை காப்பாற்ற வாய்ப்பு தந்த இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவ்வளவு எளிதில் அவரை மறக்க முடியாது. காரணம், இத்தனை வயதிலும், விவசாயம் செய்து உழைக்கத் தயாராக இருக்கும் வயதான அந்த இளைஞனை எப்படி மறக்க முடியும்!
- எம்.எம்.யூசுப், நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

