PUBLISHED ON : ஜன 27, 2016

ஷீலா கிறிஸ்துவர். கணவர் முகிலன், இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும், விளம்பர ஏஜன்சி ஒன்றில் பணிபுரிந்தபோது, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருமே ஏதோ ஒரு வகையில், வாழ்க்கையில் சிரமத்தை சந்தித்திருந்தனர். காரணம், முகிலனின் தாய் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். ஷீலாவின் தந்தையோ, மனைவியை தனியே தவிக்கவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால், ஷீலாவிற்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது; ஆனால், முகிலனை பிடித்தது. காரணம், நல்ல குணம், குடும்பத்தின் மேல் பாசம், பொறுமை போன்றவை தான். எனவே, திருமணம் செய்து கொண்டார். திருமணமான முதலே,
தனிக்குடித்தன வாழ்க்கையை ஆரம்பித்தனர். சில மாதங்களில், ஷீலா கர்ப்பமானார்.
தாய்மையடைந்ததை, தம்பதி இருவரும் கொண்டாடினர். கர்ப்பம் தரித்த உடன், ஹார்மோன் மாற்றங்களால், ஷீலாவிற்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைபாடு ஏற்பட்டது. இதனால், அவர் சோர்வாகவே காணப்பட்டார். மருத்துவரை சந்தித்து, அதற்கான மருந்துகளையும் எடுத்துக் கொண்டார். அதோடு, ஓய்வெடுக்க அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நாட்கள் நகர்ந்தன. வேலையை விட்டுவிட்ட ஷீலாவுக்கு, வங்கியில் செலவுக்கு, முகிலன் பணம் போட்டு வந்தார். ஒருநாள், அந்தப் பணத்தை எடுப்பதற்காக, ஷீலா வங்கிக்கு சென்றபோது, கால் இடறி சாலையில் விழுந்தார். அதில் ஏற்பட்ட அதிர்ச்சியில், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. அதனால், கருவிலுள்ள குழந்தைக்கு ஏதாவது ஆபத்து இருக்குமோ என்று பயந்து, என்னிடம் வந்தனர். நானும், குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்துகொள்ள, 'டாப்ளர்' பரிசோதனை செய்யச் சொன்னேன். இதயத்துடிப்பு கேட்கவில்லை. முகிலனை அழைத்து, உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றேன். அவர், தயக்கத்துடன் சம்மதித்தார். காரணம், ஷீலாவிற்கு அப்போது ஏழு மாதமே. அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தோம். அழகான ஆண் குழந்தை. ஆனால், ஒன்றரை கிலோ மட்டுமே இருந்தது. மேலும், கால்சியம், சோடியம் குறைவாக இருந்தது. அதை ஈடு செய்ய, மருந்துகள் கொடுக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. ஷீலா கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால், அறுவை சிகிச்சை செய்யும் நிலை வந்திருக்காது. அதோடு, ஏழு மாதத்தில் பிறந்ததால், குறைமாத குழந்தையாகி விட்டது. இறைவனின் அருளால், குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.ஷீலாவை பற்றி நினைவு வரும்போதெல்லாம், கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொள்வேன்.
- அ.சாந்தி,
மகப்பேறு மருத்துவர்,சென்னை.

