PUBLISHED ON : பிப் 03, 2016

அம்ரிதா கல்லூரி படிப்பை முடித்து, பெரிய நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்து, ஓராண்டிற்கு மேலாகி விட்டது. அம்ரிதா அழகாக இருப்பார். அவரது பெற்றோருக்கு திருமணமாகி, பல ஆண்டுகளுக்கு பின் தான் அம்ரிதா பிறந்தாததால் படுசெல்லம். திடீரென, தனிமையை விரும்பினார்; காரணம் தெரியாமல் பெற்றோர் தவித்தனர். ஒரு நாள் அம்ரிதாவின் தாய், இது பற்றி அவரிடம் கேட்க, அழத்துத் துவங்கி, தன் பிரச்னையை தாயிடம் கூறினார்.
மார்பகத்தில் திடீர் சுருக்கமும், வீக்கமாக இருப்பதாகவும், காம்பிலிருந்து நீர் வடிவது மற்றும் ரத்தக்கசிவு இருப்பதாகவும் கூறியதோடு, மன உளைச்சலுடன் இருப்பதாக கூறினார். மருத்துவரிடம் பரிசோதித்ததில், மார்பகப் புற்று ஆரம்ப நிலையில் இருப்பதாக கூறினர். அம்ரிதாவின் பெற்றோருக்கு உயிரே போனது போலாகிவிட்டது. 'இன்னும்
திருமணம் கூட ஆகவில்லையே... இது என்ன சோதனை...' என்று விரதமிருக்க ஆரம்பித்தனர்.
பின் புற்றுநோய் நிபுணரை சந்தித்து, சிகிச்சை மேற்கொண்டு மார்பகத்தில் புற்றுநோய் பாதித்த சதைகளையும்,
திசுக்களையும் அகற்றி விட்டனர். இதுவே நோய் முற்றிய நிலை என்றால், முழு மார்பகம் மற்றும் அக்குளில் நெரி
கட்டிய பகுதிகளை அகற்றி விடுவர். அம்ரிதா சிகிச்சைக்குப் பின் இயல்புநிலை திரும்பினாரா என்றால் இல்லை. காரணம், ஊசி மற்றும் கதிர்வீச்சு கொடுத்த இடங்கள் கருமையடைந்து மிகவும் இறுகிப் போய் அசிங்கமாக காட்சியளித்தது. இதனால், தன் மார்பக அழகு கெட்டு விட்டது; யார் தன்னை திருமணம் செய்து கொள்வார் என, மன உளைச்சலோடு இருந்தவரை, என்னிடம் அழைத்து வந்தனர். முன்பெல்லாம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட மார்பகத்தை மறுசீரமைப்பு செய்ய முதுகு, வயிறு, தொடை போன்ற பகுதிகளிலுள்ள தசைகள் மற்றும் தோலை எடுத்து, நிபுணர்கள் மறுசீரமைப்பு செய்வர். இதனால், தசைகளில் தழும்பு ஏற்படுவதோடு, தசைக்குரிய செயல்பாடுகள் இயலாமல் போகும். மேலும், பெண்கள் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய மயக்கம் கொடுப்பது, பொருளாதார நெருக்கடி போன்ற சிக்கல்கள் இருப்பதால், மார்பக புற்றுக்குப்பின் மறுசீரமைப்பை பற்றி சிந்திக்காமல் உள்ளனர். ஆனால் அம்ரிதா திருமணம் ஆகாதவர் என்பதால், கட்டாயம் மறுசீரமைப்பு அவசியமானது. எனவே, அவருக்கு மருத்துவ முன்னேற்றத்தால் மாற்றுவழியாக, 'பேட் பில்' எனப்படும் சிகிச்சை. அதாவது வயிறு, தொடை போன்ற பகுதிகளிலுள்ள, கொழுப்புகளை எடுத்து அதிலுள்ள, 'ஸ்டெம்' செல்லை பதப்படுத்தி, மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்த இடத்தில் செலுத்தினோம். இச்சிகிச்சை மேற்கொண்டதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இடம் மென்மையாக மாறியதோடு, கருமை நிறமும் காணாமல் போய்விட்டது. அதோடு மற்ற மார்பகம் போல், சரியான அளவில் சீர்செய்யப்பட்டது. இச்சிகிச்சையை ஒரே நாளில், ஓரிரு மணி நேரத்திலேயே சிறு மயக்கத்தோடு செய்து முடிக்கப்பட்டது. அம்ரிதா அடுத்த அறுவை சிகிச்சை எனும் பயத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு, தற்சமயம் மன உளைச்சல் இல்லாமல் இருப்பதோடு, பழைய நிலைக்கு திரும்பி வேலைக்கும் செல்கிறார். அம்ரிதாவின் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. அவளது திருமண பத்திரிகைக்காக காத்திருக்கிறேன்.பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும், இந்நாள் மருத்துவ உலகில் முக்கிய தினமாக பார்க்கப்படும் இச்சமயத்தில் அம்ரிதாவை நினைவு கூர்வதில் மகிழ்ச்சியே.
- எஸ்.கிருத்திகா ரவீந்திரன்
அழகு சீரமைப்பு நிபுணர், சென்னை
74027 23411

