என் மகனுக்கு வயது 31. திருமணத்திற்கு பெண் பார்க்கிறோம். இந்த சமயத்தில் இருமல் ஆரம்பித்தது; இதயத்தைச் சுற்றிலும் நீர் கோர்த்திருப்பதாகக் கூறி, நீர் எடுத்தோம். ஆனால், அவனுக்கு, இதயம் மற்றும்நுரையீரல் இரண்டிற்கும் இடையில், புற்றுநோய்க் கட்டி சிறு அளவில் இருப்பதால், கீமோதெரபி கொடுத்தாயிற்று.  என் மகனை குணமாக்க முடியுமா?
சி.செந்தில், கோவை.
உங்கள் மகனின் உடல்நிலை பரிசோதனையின் முடிவுகளை, முதலில் பார்க்க வேண்டும். குறிப்பாக, 'பயாப்ஸி' பரிசோதனையின் முடிவுகள் வேண்டும். கீமோதெரபி கொடுத்து குணமடைந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள, மறுபரிசோதனை அவசியம். மேலும் கீமோதெரபி கொடுத்தும் குணமாகவில்லையென்றால், நோயின் வகையை பொறுத்து, சில வகை புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தும், கதிர்வீச்சு சிகிச்சை செய்தும் 
குணப்படுத்த வாய்ப்புண்டு. ஜெ.ஜெயக்குமார், தலைவர், புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, அறிஞர் அண்ணா புற்று நோய் மருத்துவமனை, காஞ்சிபுரம்.
என் பேரன் அஸ்வின் பிறந்தவுடன் அழவில்லை. வலிப்பும் வந்தது; உடனடியாக வேறு மருத்துவமனைக்கு செல்லும்போது, அழ ஆரம்பித்தான். இருந்தும், தொப்புள் கொடி  கழுத்தைச் சுற்றியபடி பிறந்ததால், ஒரு வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டான். தற்போது, எல்.கே.ஜி., படிக்கிறான்; நல்ல புத்திசாலி. ஆனால், திடீரென தன் கைமுட்டியை மடக்கி கன்னங்களில் வைத்து அழுத்தியபடி நடுக்கம் காண்பிக்கிறான். மேலும் கால்கள் வலிப்பதாக, சில நேரங்களில் சொல்கிறான். அவனது தாய்க்கும், சிறுவயதில் இதுபோன்று கால் வலி இருந்ததாம். இதற்கு காரணம் என்ன?
கே.சோமன். பள்ளிக்கரணை, சென்னை.
தாமதமாக அழுதல் என்பது,  சாதாரணமான ஒன்று தான். அதற்கு காரணம், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் கலந்த ரத்தம் சரியாக செல்லவில்லை என்றால், மூளையில் தற்காலிகமாக சிறு மாற்றங்கள் ஏற்படும். இதை வெளிபடுத்தும்விதமாக, வலிப்பு வந்திருக்கும். இது குறித்து பயப்படத் தேவை இல்லை. 
இதற்கு கொடி சுற்றி பிறந்தது கூட, ஒரு காரணமாக இருக்கும். இது மருத்துவ மொழியில், 'ஐபாக்ஸியா இண்டியூஸ்டு என்செபோலோபதி' என்றழைக்கப்படுகிறது. 100ல், 10 குழந்தைகள் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். அஸ்வினின் கால் வலிக்கு காரணம், அவனது வயதில் குழந்தைகள் இங்கும், அங்கும் ஓடி விளையாடுவர்; அதனால் தசைகளில் வலி ஏற்படும். இதை கால் வலியாக கூறுவான். ஐந்து வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, நரம்புகள் முழுமையாக வளர்ச்சி பெறாததால், வலி உணர்ச்சிகள் குறைவாகத் தான் இருக்கும். தாய்க்கு கால் வலி இருந்ததால், குழந்தைக்கும் ஏற்படும் என்பது இல்லை. கைமுட்டியை தாங்கி நடுக்கம் காண்பிப்பது, வளர்ச்சியின் பரிமாற்றம். பழக்க வழக்கமான செய்கைகள், இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
வெ.வெங்கடேசன், குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.

