PUBLISHED ON : டிச 24, 2014

மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, வெப்-கேமராவில், தன்னை மட்டுமோ அல்லது நண்பர்களோடு இணைந்தோ, தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களைத்தான், 'செல்பி' என்கிறோம். துாங்கி எழுந்தது முதல் மறுபடி துாங்குவது வரையிலான நிமிடங்களை, பேஸ்புக், ட்விட்டர் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது, அன்றாட வாழ்வில் ஒரு நிகழ்வாகவே மாறிவிட்டது.
'செல்பி' எடுப்பது சுலபம் என்பதும், உடனடியாக பகிர்ந்து கொள்ள வசதிகள் இருப்பதுமே, செல்பி வேகமாக பரவுவதற்கான காரணங்கள்!
செல்பிக்களில் பலவகை உண்டு. பல முகபாவங்களுடன் எடுத்துக் கொள்வது ஆரம்பநிலை! அடுத்தடுத்து, உடல் அங்கம் தெரியும்படி எடுப்பது, உடலை துன்பப்படுத்தி கோரமாக எடுப்பது, உள்ளாடையோடு ஆபாச போஸ் கொடுத்து எடுப்பது என்று, இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன், ஓடும் ரயிலின் அருகே நின்று செல்பி எடுத்தபோது, ரயில் மோதி உயிரிழந்தான். செல்பி எடுப்பதில் இப்படிப்பட்ட ஆபத்தும் இருக்க, 'ரிவன்ஜ் பார்ன்' எனப்படும் ஆபாசப் பழிவாங்கலும் இதில் உண்டு! காதல் ஜோடிகள், தாங்கள் அன்பாய் இருந்த தருணத்தில் எடுத்த புகைப்படங்களை, பிரச்னையின் போது பரப்பி விட்டு, பழிவாங்கும் இந்த 'ரிவன்ஜ் பார்ன்' சமீபகாலமாய் அதிகரித்திருக்கிறது.
'செல்பி' படங்களை பொழுதுபோக்கிற்காக பிரசுரிக்கிறோம் என்றால் தவறல்ல! ஆனால், அந்த படங்களுக்கு, 'லைக்'குகள், 'கமென்டு'கள் வர வேண்டும் என்ற நோக்கில் செய்கிறோம் என்றால், உடனே அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். காரணம், இந்த நிகழ்வு தொடர்கதையாகும்; காலப்போக்கில் மனநோயாளியாக மாற்றி விடும்!
- சத்யா
மனநல மருத்துவர்.

