PUBLISHED ON : டிச 24, 2014

கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. உணர்ச்சிகள் மட்டுமல்லாமல், உடலியல் சார்ந்தும் கண்ணீர் வெளிப்படும். எதிர்மறையான உணர்வுகளினால் கண்ணீர் பெருகினால், அதை அழுகை என்கிறோம். அழுவதென்பது, பெரும்பாலும் வலி சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இவை அல்லாமல், பிறரின் கவனத்தை ஈர்க்கவும், தண்டனையில் இருந்து தப்பவும், அசிங்கப்படுத்தவும் சிலர் அழுகின்றனர். ஆனாலும், இவையனைத்தையும் விட முக்கிய காரணம், இயலாமை! 'தன்னால் எதுவும் சாத்தியமில்லை' எனும் சந்தர்ப்பத்தில் கண்ணீர் தானாக பெருகும். இப்படி, மனம் பாரமாகும், இறுக்கமாகும் தருணங்களில், உணர்ச்சிக் கொந்தளிப்பால் அழுகை வரும். அழுத பிறகு, மனம் லேசாகும்.
பொதுவாக, குற்ற உணர்வு மற்றும் அவமானத்தில் அழுபவர்கள், தனிமையில் அழுவர். பிறர் முன்னிலையில் அழுவது 'இயலாமை' என்றும், 'பலவீனத்தின் அறிகுறி' என்றும் இங்கே பார்க்கப்படுகிறது. இதனால், மனம் இறுகி சமநிலையை அடைய பாடுபடுகிறது. உடலியல் மாற்றங்களால், பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறது. இப்படி இறுகும் மனம், உடைந்து போகவும் வாய்ப்புண்டு. இதை நாம் உணர வேண்டும்.
சூழ்நிலையின் தாக்கத்தை ஜீரணிக்கத் தெரிந்து, அழுகையை அடக்கினால் தப்பில்லை! ஆனால், நாகரிகம் கருதி அழுகையை அடக்கக் கூடாது. காரணம், அழுவது பலவீனமல்ல; அவமானத்தின் அறிகுறியுமல்ல; அது, மனதை ஆரோக்கியமாக வைக்கும் உடற்பயிற்சி.
இனிமேலாவது, நியாயமான, தீர்க்கமான காரணங்களுக்கு கண்ணீர் சிந்த தயங்காதீர்!
மனநல சந்தேகங்களுக்கு: 94440 34647
- மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்

