PUBLISHED ON : டிச 24, 2014

'எஸ்தர் முதல் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் படுசுட்டி!' என, இன்று காலை, தன்
மகளைப் பற்றி, மேரி சொல்லிச் சென்ற விஷயங்கள் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.
இந்த மேரியை, ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ஜுன் மாதத்தில் சந்தித்தேன். அவரது முகம் முழுக்க ஒருவித குழப்பம்.
'என் வயிற்றில் வளர்ந்துவரும் 17 வாரக்கருவின் முதுகெலும்பு, 'மெனிங்கோமைலோசில்' எனும் முதுகு தண்டுவட வளர்ச்சி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறதாம்! அதனால், கருவை கலைக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் கூறுகின்றனர்' என்றார்.
மேரியும், அவரது கணவனும் அந்தக்கருவை அழித்து விடும் முடிவுக்கு வந்திருந்தனர். 'ஐந்து மாத கரு என்பதால் கலைக்க முடியாது. கலைத்தால் மேரியின் உயிருக்கு ஆபத்து' என்றேன். 'அப்படியென்றால் இறைவன் விட்ட வழி' என்று, அவர்கள் தங்களை சமாதானப்படுத்திக் கொண்டனர். மேரிக்கு குழந்தை பிறந்தது. உடனடியாக அதற்கு அறுவை சிகிச்சை செய்தோம். குழந்தையின் குறைபாடு நீங்கியது.
'மெனிங்கோமைலோசில்' பிரச்னை எப்படி ஏற்படுகிறது என்பதை, இன்று சிந்தித்து பார்த்தேன். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் 'போலிக் ஆசிட்' எனும் இரும்புச்சத்து குறைபாடு இருக்குமானால், கருவின் நரம்புத்தொகுதி பாதிக்கப்படும். முதுகெலும்புத் தண்டில் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புத்தொகுதிகள், முழுமையாக மூடப்படாமல் இருக்கும். மூளை, மண்டை ஓடு, இவற்றின் வளர்ச்சி குறையும். வளர ஆரம்பிக்கும் முதுகெலும்புகள், முழுமையான வளர்ச்சி பெறாது. முதுகில் கட்டி ஒன்று உருவாகும். அந்த கட்டிக்குள், நரம்புகள் எல்லாம் சென்றுவிடும்.
இக்குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, சிறுநீரும், மலமும் தானாகவே வெளியேறும். தலை பெரிதாகிக் கொண்டே போகும். குழந்தையின் மொத்த ஆயுளும், சக்கர நாற்காலியிலோ அல்லது படுக்கையிலோதான் கழியும். நல்லவேளை எஸ்தருக்கான பிரச்னையை சரிசெய்து விட்டோம்.
தந்தையாக வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு ஆணும், 'போலிக் ஆசிட்' மிகுந்த பச்சை காய்கறிகள், முளைவிட்ட பருப்புகள் உள்ளிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், உயிர் அணுக்களில் உருவாகும் குரோமோசோம் குறைபாடுகள் தவிர்க்கப்படும். திருமணத்திற்கு பின்பு, பெண்களும் 'போலிக் ஆசிட்' நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
மேரியும், எஸ்தரும் இதே சந்தோஷத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்!
- சென்,
குழந்தைகள் நல மருத்துவர்.

