PUBLISHED ON : டிச 24, 2014

1. குளிர்காலத்திற்கும், தோல் வறட்சிக்கும் என்ன தொடர்பு?
குளிர்காலத்தில் தாகம் குறைவதால், உடலுக்கான நீர் தேவை குறைந்து விடும். இதனால், உடல் வறட்சியும், தோல் வறட்சியும் ஏற்படும். குளிருக்கு சூடாக, மசாலா நிறைந்த உணவைச் சாப்பிட ஆவலாகி விடுவோம். அதை, அதிகளவில், 'உள்ளே' தள்ளும்போது, அவை, ஜீரண மண்டலத்தை பாதித்து, மலச்சிக்கலை உண்டு பண்ணும். இதனாலும், தோலில் வறட்சி உண்டாகும்.
2. அடுக்குத் தும்மலுக்கும், குளிர்காலத்துக்கும் தொடர்புண்டாமே?
இதற்கு, 'ஒவ்வாமைத் தும்மல்' என்று பெயர். குளிர்காற்று, பனி, ஊதுவத்தி, படுக்கையறை விரிப்புகள், தலையணை ஆகியவற்றில் காணப்படும், 'மைட்ஸ்' எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், நம் சுவாசப் பாதையைப் பதம் பார்த்து விடுவதால், சளி கொட்டுதல், தொடர் தும்மல், நுரையீரலில் சளி சேர்தல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. 'இம்யூனோதெரபி' மூலம் இதற்கு தீர்வு உண்டு.
3.'குளிர்காற்றில் வைரஸ்கள் அதிகம் இருக்கும்' என்பது உண்மைதானா?
ஈரப்பதம் உள்ள காற்றில் வைரஸ்கள் அதிகம் இருக்கும். இதனால், அடுக்குத் தும்மல், சைனஸ், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சு சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
4. முதியோர்களுக்கான குளிர்கால பாதிப்புகள் என்னென்ன?
மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்படும். மூளை மற்றும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.
இதனால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புண்டு. ரத்த ஓட்டம் சீராக, நீண்ட துார நடைபயிற்சி மேற்கொள்வதும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.
5'ஒற்றைத் தலைவலி' என்பது குளிர்கால பாதிப்பா?
அப்படியல்ல! வேலைப்பளு, மனஅழுத்தம், அதிக நேர கணினி வேலை, வானிலை மாற்றங்கள் என, பல்வேறு காரணங்கள் இதற்குண்டு. மூளை இயங்குவதற்குத் தேவையான 'செரடோனின்' எனும் வேதியியல் திரவத்தின் அளவு குறைவது தான், இந்த ஒற்றைத் தலைவலிக்கான காரணம்!
6. என்னென்ன உணவுகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை?
குளிர்காலத்தில், நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயக்கம் சீராக, 'வைட்டமின் சி' சத்து நிறைந்த ஆரஞ்சு, பசலைக்கீரை, ப்ராக்கோலி, காலிபிளவர், ஸ்ட்ராபெர்ரி, முட்டைகோஸ், திராட்சை, பீட்ரூட், பரங்கிக்காய் எடுத்துக் கொள்வது நல்லது.
7. இச்சமயத்தில் வறட்டு இருமல் தாக்குவது ஏன்?
காய்ச்சல் வருவதற்கான பொதுவான அறிகுறிகளே சளியும், இருமலும்! இருமல் வருவதற்கு காய்ச்சலைத் தவிர அலர்ஜிகள், ஆஸ்துமா, வறண்ட காற்று மற்றும் புகை கூட காரணமாகலாம். குளிர்காலத்தில், அடிக்கடி வெந்நீர் குடித்து, நீர்ச்சத்தோடு இருந்தாலே வறட்டு இருமல் தீண்டாது.
8. குளிரால், வியர்வை வெளியேறுவது குறைவதால், சளி, காய்ச்சல் வருமா?
கண்டிப்பாக! குளிர்காலத்தில் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், ஓரளவு மட்டும்தான் வியர்வை வெளியேறும். இதனால், உடலில் நச்சுப் பொருட்கள் தங்கிவிடும். இது, சளி, காய்ச்சலுக்கும் காரணமாகும்.
9. ஆஸ்துமா நோயாளிகளுக்கான குளிர்கால அறிவுரை?
குளிர்ச்சி அளிக்கும் பழங்கள், தயிர், போன்ற உணவுப் பொருட்களை இக்காலங்களில் சாப்பிடக் கூடாது. செல்லப் பிராணிகளை கொஞ்சுவதை தவிர்க்க வேண்டும். காரணம், அவற்றின் எச்சங்கள், முடிகள் காரணமாகவும் ஆஸ்துமா பிரச்னை அதிகமாகும்!
10. குழந்தைகளுக்கான குளிர்கால உணவுகள்?
தினமும் முட்டையோடு, உஷ்ண உணவுகளான கம்பு, சோளம், கோதுமை, உலர் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேர்ப்பதால், புரோட்டீன்கள், வைட்டமின்கள், கனிமம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும். இதனால், சளி, இருமல் தொல்லை இருக்காது.

