PUBLISHED ON : ஜூலை 31, 2022

நீண்ட நேரம் தாய்ப்பால் தராமல், மார்பக சுரப்பிகளில் பால் கட்டிக் கொள்ளும் போது, அது பாக்டீரியா தொற்றுக்கு வழி செய்கிறது. இது, மார்பக திசுக்களில் அழற்சியை ஏற்படுத்தி, இதன் தொடர்ச்சி யாக தொற்று, மார்பு காம்புகளில் வலி, தோல் வழக்கத்தை விடவும் மென்மையாக மாறி விடுவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
வலிக்கு பயந்து, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே தயங்குகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு இருந்தால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிதாக இதை சரிசெய்ய முடியும். நீண்ட நேரமாக பால் சுரப்பிகளில் பால் கட்டி இருந்தால், தோல் வழியாக செல்லும் பாக்டீரியாக்கள் தொற்றை ஏற்படுத்தும். இதனாலேயே அழற்சி வருகிறது.
பால் கட்டும்போது, தாய்ப்பால் தரும் தாய்மார்கள், குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் தாய்ப்பால் தருவதோடு, மார்பகங்களில் பால் கட்ட விடக் கூடாது. குழந்தையின் தேவைக்கு போக அதிகம் இருந்தால், 12 மணி நேரத்திற்கு ஒரு முறை, 'பம்ப்' வாயிலாக அல்லது தாங்களாகவே வெளியேற்றி விட வேண்டும்.
பால் கட்டிக் கொள்வதால், தாய்க்கு உடல் குளிர்ந்து போவது, வலி, மார்பகங்கள் அடர்த்தியாவது, உடல் சோர்வு, மார்பகங்களில் கட்டி, வீக்கம், சிவந்த தடிப்புகள், தாய்ப்பால் தரும் போது வலி, எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
காரணம், வலிக்கு பயந்து பலர் பால் கொடுக்கவே தயங்குகின்றனர். இதனால் குழந்தைக்கு பால் தர முடியவில்லையே என்ற மன உளைச்சல், ஏமாற்ற உணர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்
மகப்பேறு மற்றும் தாய்ப்பாலுாட்டல் திறன் ஆதரவாளர்,
சென்னை