'இதை எல்லாம் செய்யுங்க...' - 'ஆயுஷ்' கூறும் அறிவுரையை கேளுங்க
'இதை எல்லாம் செய்யுங்க...' - 'ஆயுஷ்' கூறும் அறிவுரையை கேளுங்க
PUBLISHED ON : ஏப் 16, 2020

திருப்பூர்: கொரோனா பரவி வரும் நிலையில், வீட்டில் இருந்தே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச்செய்யும் அறிவுரை களை, 'ஆயுஷ்' அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
ஆயுர்வேதம் யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகள், 'ஆயுஷ்' என்ற மத்திய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கொரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் பலர் வெளியிட்டு வருகின்றனர். எதை நம்புவது என மக்கள் குழம்பியிருக்கும் சூழலில், 'ஆயுஷ்' தனது டிவிட்டரில் பக்கத்தில் கீழ்கண்ட அறிவுரைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
* எப்போதும் வெந்நீரையே பருக வேண் டும். நாள்தோறும் யோகாசனம், பிராணயாமம், தியானம், ஆகியவற்றை, 30 நிமிடங்கள் செய்யலாம். மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, வெள்ளை பூண்டு ஆகியவற்றை அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* துளசி, லவங்கம், கருமிளகு, சுக்கு, உலர் திராட்சை ஆகியவை கலந்த மூலிகை டீயை மண்டவெல்லம் சேர்த்த நாள்தோறும், ஒன்று அல்லது இருமுறை பருக வேண்டும். இதில் எலுமிச்சை பழ சாறும், சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள் துாள் கலந்த பாலை நாள்தோறும் ஒன்று அல்லது இருமுறை குடிக்கலாம்.
* காலை, மாலை மூக்கு துளைகளில் தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றை சில துளிகள் விடலாம். ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் வைத்துக்கொண்டு, 3 நிமிடங்கள் கழித்து கொப்பளிக்க வேண்டும். இதை ஒருநாளைக்கு ஒன்று அல்லது இருமுறை செய்யலாம்.
* வறட்டு இருமல், தொண்டைவலி இருந்தால் புதினா தழைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். மண்டைவெல்லம், கருப்பட்டி, தேன் இவற்றில் ஏதாவத ஒன்றுடன் கிராம்புத்துாள் கலந்து ஒரு நாளைக்கு, 3 முறை உட்கொண்டால் இருமல், தொண்டைவலி நீங்கும்.
இந்த அறிவுரைகளை பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மூலமாக மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
