வைரசுக்கு பயந்து கண் பரிசோதனையை தவிர்க்காதீர்கள்!
வைரசுக்கு பயந்து கண் பரிசோதனையை தவிர்க்காதீர்கள்!
PUBLISHED ON : பிப் 06, 2022

சர்க்கரை கோளாறு போன்றே, 'குளூக்கோமா' எனப்படும் கண் அழுத்த நோயும், சத்தமில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. பல நேரங்களில், சர்க்கரை கோளாறு இருப்பதே தெரியாது; தெரியும் போது, உடலின் பல பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். அதுபோல தான் குளூக்கோமாவும். இதில் முதலில் பாதிக்கப்படுவது பக்கவாட்டு பார்வை.
பலரும் செய்யும் தவறு, கண்ணை பரிசோதிக்க கண்ணாடி கடைக்குச் செல்வது. அங்கு வெறுமனே கண் 'பவர்' சோதித்து கண்ணாடி தருவர். கண்ணாடி போட்டதும், பார்வை தெளிவாக தெரியும்; நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறது என்று விட்டு விடுவர்.
பக்கவாட்டில் இருந்து பார்வை சிறிது சிறிதாக குறைந்து, நேராக நாம் பார்க்கும் பிம்பம் மங்களாக தெரியும் போது தான், பிரச்னையை உணருவோம். 'கேட்ராக்ட்' எனப்படும் கண்புரையால் பார்வை முழுமையாக போனால், அறுவை சிகிச்சை மூலம், 100 சதவீதம் திரும்ப பெறலாம்; குளூக்கோமாவால் பார்வை பறிபோனால் திரும்பாது.
சில நேரங்களில், டாக்டர்களிடம் சென்று பரிசோதிக்கும் போது, அபூர்வமாக சில வகை குளூக்கோமாவில் அழுத்தம் சரியாக இருக்கும்; ஆனாலும் பிரச்னை இருக்கும். இது, மரபு வழியாக வரும் பிரச்னை என்றாலும், சர்க்கரை நோய் உட்பட வாழ்வியல் மாற்றத்தால் குளூக்கோமா பாதிப்பு ஏற்படும்.
நம் நாட்டில் இது மிகவும் பிரச்னையாக உள்ளது. எந்த வயதினரையும் பாதிக்கும். தீவிர பார்வைக் கோளாறு இருப்பவர்களுக்கு, குளூக்கோமா வரும் வாய்ப்பு அதிகம். ஆண்டிற்கு ஒரு முறை கண் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
தொற்று ஏற்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரச்னையின் தீவிரம் அதிகரித்து உள்ளது. வைரஸ் தொற்றுக்கு பயந்து, கண் பரிசோதனையை தவிர்க்க கூடாது. முக கவசம் உட்பட அடிப்படையான பாதுகாப்போடு, தேவைப்படும் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
டாக்டர் சூசன் ஜேக்கப்,
அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை.
94453 91190
