PUBLISHED ON : செப் 27, 2015
இன்றைய உலகில், சாப்பிடுவதற்கு கூட பலருக்கு நேரமில்லை. பரக்க பரக்க உணவை சாப்பிட்டு செல்வதால் தான், பல்வேறு பாதிப்புகள் உடலில் ஏற்படுகிறது. நொறுங்க தின்றால் நூறு வயது என்பது உணவு உண்ணும் போது, நாம் பின்பற்றவேண்டிய வழிமுறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழி. பசி எடுத்தவுடன்தான் சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் உண்ட உணவு செரித்து விட்டதாகக் கருத முடியும். இல்லையேல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். உடலில் நச்சுப் பொருள்கள் தேங்கி பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்துவிடும். சரியான நேரத்தில் சாப்பிடவும்.
உணவை வாயில் வைத்து சுவைத்து கூழ்போல் ஆகும் வரை, நன்றாக மென்று பின்னர் விழுங்க வேண்டும். இது உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. எல்லா சத்துக்களும் கிடைக்கவும் உதவுகிறது. உணவை மெல்லும் போது, வாயை மூடி மெல்ல வேண்டும்.
முகம், கைகளை நன்றாக கழுவி விட்டு சாப்பிட உட்காரவும். சாப்பிடும் போது மிகவும் தளர்வாக, அமைதியாக இருக்க வேண்டும். மனக் கவலை, பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுகளோடு சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வழி வகுக்கும்.
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன், 2 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுபோல் சாப்பிட்டு முடித்து, ஒரு மணி நேரத்துக்குப் பின்னர்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால், உணவு சரியாக ஜீரணமாவதற்கு முன்பாகவே, வயிற்றில் இருந்து குடலுக்கு தள்ளப்பட்டு விடும்.
காரமான உணவை சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.

