PUBLISHED ON : மே 01, 2011
நான் இரண்டு ஆண்டுகளாக ஹார்ட் பெயிலியருக்கு மாத்திரை எடுத்து வருகிறேன். சர்க்கரை நோய் உள்ளது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு 95 மி.கி., என்ற அளவில் உள்ளது. சரியா?
* வெ.ராமசாமி, அருப்புக்கோட்டை
சர்க்கரை நோய் உள்ள இருதய நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் குறைப்பது மிகத்தவறானது. ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 130 மி.கி., என்ற அளவிலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 180 மி.கி., என்ள அளவிலும் இருந்தால் போதுமானது. இத்துடன் ஏஞஅ1ஞி என்பதன் அளவு 7.0 என்ற அளவிலும் இருந்தால் போதும். உங்களுக்கு 95 மி.கி., என்ற அளவில் இருப்பது மிகக்குறைவு. எனவே, நீங்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து, சர்க்கரை மாத்திரைக்கான அளவை குறைக்கவோ, நிறுத்தவோ வேண்டும்.
Hypertrophic Cardio Myopathy என்றால் என்ன? * எஸ்.பாக்கியநாதன், மதுரை
Hypertrophic என்றால் வீக்கம் Cardio என்றால் இருதயம்; Myo என்றால் தசை; pathy என்றால் வியாதி என்று பொருள். இது பிறவியில் இருந்தே இருக்கும் பரம்பரை வியாதி. இதில் இருதயத்தில் உள்ள தசைகள் வீங்கிக் கொள்கிறது. இதனால், இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், வால்வுகளில் ரத்தக்கசிவும் ஏற்படலாம். இந்த வியாதி உள்ளவர்கள் கடின உழைப்பு, ஓட்டப்பந்தயங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், திடீரென இருதய மின்னோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு மரணம் கூட ஏற்படலாம். இந்த வியாதிக்கு மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை மற்றும் பேஸ்மேக்கர் சிகிச்சை முறைகள் உள்ளன. இவ்வியாதியின் தீவிரம் தசையின் வீக்கத்தை பொறுத்தே அமையும்.
எனக்கு சிறு வயதில் இருந்தே ஆஸ்துமா உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன் மாரடைப்பு வந்தது. இதற்காக Betaloc, Clopilet, Atorva மாத்திரைகள் எடுத்து வருகிறேன். தற்போது எனக்கு ஆஸ்துமா அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் இம்மாத்திரைகள் தானா? * பி.ராஜேந்திரன், கொடைக்கானல்
நீங்கள் எடுக்கும் மூன்று மாத்திரைகளும் இருதய நோய்க்கு மிக முக்கியமானவை. ஆனால், Betaloc என்னும் Beta Blocker என்ற மாத்திரை எடுப்பவர்களுக்கு ஆஸ்துமா அதிகரிக்கும் தன்மை உள்ளது. ஆகவே, இதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக, Nebivolol என்ற மாத்திரையோ அல்லது வேறு மாத்திரையையே எடுப்பது நல்லது. அதை உங்கள் டாக்டரின் ஆலோசனைப்படி செய்வது அவசியம். இதை செய்தால் உங்கள் ஆஸ்துமா கட்டுப்படும்.
பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு மீண்டும் பைபாஸ் சர்ஜரி செய்ய இயலுமா? * ஆர்.சுப்பையா, ராமநாதபுரம்
பைபாஸ் சர்ஜரி என்பது இருதய ரத்த நாள அடைப்பை சரி செய்ய, நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ ரத்தக் குழாய்களை எடுத்து, இருதயத்தில் பொருத்தப்படும் அறுவை சிகிச்சை முறையாகும்.பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு தங்களது ரத்தநாளத்தில் பழைய அடைப்பு கூடவும், புதிதாக பொருத்திய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் தன்மையும் உள்ளது. அப்படி ஏற்பட்டால் அதற்கு மாத்திரை மூலமோ, ஆஞ்சியோ பிளாஸ்டியோ, மறுபடியும் பைபாஸ் சர்ஜரியோ செய்ய இயலும். பைபாஸ் சர்ஜரி செய்தவருக்கு மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் இருக்க, வாழ்க்கை முறை மாற்றம், தினசரி உடற்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, தினமும் வேளை தவறாமல் மருந்து, மாத்திரையை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை
