PUBLISHED ON : ஜன 06, 2013

'ருமாட்டிக்' காய்ச்சல் என்பது, பொதுவாக சிறுவயதில் ஏற்படும் நோய். இந்த நோயின் தன்மை, மூட்டுவலியாக வெளிப்பட்டாலும், பாதிப்பு இதயத்திற்குத் தான். இதய வால்வுகளில் ரத்தக்கசிவும், சுருக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
என், 14 வயது மகளுக்கு, 'ருமாட்டிக்' காய்ச்சல் வந்தது. இந்த காய்ச்சல் மீண்டும் வராமல் இருக்க வழியுண்டா?
- ஆர். ஆண்டாள், விருதுநகர்
'ருமாட்டிக்' காய்ச்சல் என்பது, பொதுவாக சிறுவயதில் ஏற்படும் நோய். இந்த நோயின் தன்மை, மூட்டுவலியாக வெளிப்பட்டாலும், பாதிப்பு இதயத்திற்குத் தான். இதய வால்வுகளில் ரத்தக்கசிவும், சுருக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மகளை, இதய நோய் நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள். டாக்டரிடம் காண்பித்து, இதய பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவது அவசியம். 'எக்கோ' பரிசோதனை அவசியம். இதுதவிர, 21 நாட்களுக்கு ஒருமுறை, 'பெனிடியூர்' ஊசியை, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு போட வேண்டும். இப்படிச் செய்தால் நோயின் ஆதிக்கம் இல்லாமல், மறுபடியும் மூட்டுவலி ஏற்படாமல் இருக்கும். இதயத்தைப் பொறுத்தவரை பாதிப்பு, எந்த வால்வில் உள்ளது என்பதைப் பொறுத்து சிகிச்சை முறை அமையும்.
என் வயது 51. இதுவரை உடற்பயிற்சி செய்ததில்லை. என் நண்பர், வீட்டுக்கு அருகில் உள்ள, 'ஜிம்'மில் உடற்பயிற்சி செய்கிறார். என்னையும் பயிற்சி செய்ய அழைக்கிறார். திடீரென உடற்பயிற்சி செய்யலாமா?
- கே.ராமச்சந்திரன், பழநி
புதிதாக, 40 வயதுக்கு மேல், உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்கள், தங்களது டாக்டரின் ஆலோசனை படி, முழு உடற்பரிசோதனை, 'எக்கோ' மற்றும், 'ட்ரட் மில்' பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகள் சரியாக இருந்தால், பயிற்சியை துவக்கலாம். திடீரென உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் போது, இதயம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதிக எடையுள்ள கருவிகளைக் கையாளும் போது, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. டாக்டர் அனுமதி பெற்ற பின்பும், சில வாரங்களுக்கு மென்மையான பயிற்சியும், படிப்படியாக பயிற்சியை அதிகரிக்க வேண்டும். தினசரி பயிற்சி செய்பவர்கள், திடீரென இரண்டு மாதங்கள் விட்டு, மீண்டும் துவக்கினாலும், இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும். உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, கடினமான பயிற்சி செய்வதை விட, தினமும் பயிற்சி செய்வதே நல்லது. அதுவே, உடல் உள் உறுப்புகளுக்கு சிறந்தது.
எனக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து, இரண்டு மாதங்களாகிறது. மும்பைக்கு விமானத்தில் செல்லலாமா?
-எம். பத்மனாபன், கம்பம்
பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்த, இரண்டு வாரங்களுக்கு விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும். அதன்பிறகு விமானப் பயணம் செய்வதில் தவறில்லை. இருந்தாலும், உங்கள் டாக்டரிடம் ஒருமுறை சென்று, சில பரிசோதனைகள் செய்து, அவரின் அனுமதி பெற்று செல்வதே நல்லது.
டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை