PUBLISHED ON : டிச 30, 2012
எனக்கு வயது 40. ஒரு ஆண்டாக மூச்சுத் திணறல் உள்ளபோது, 'Asthalin Inhaler Spray செய்து கொள்வேன். இதுசரிதானா?
மூச்சுத் திணறல் உள்ள ஒருவர், ஆஸ்தாலின் எடுத்துக் கொள்ளும்போது, 6 மணி நேரம் செயலாற்றுகிறது. நம் மூச்சுக்குழாயில் வீக்கம் மற்றும் சுருக்கம் ஏற்படும்போது, நமக்கு மூச்சுத் திணறுகிறது. ஆஸ்தாலின் மூச்சுக் குழாயின் சுருக்கத்தை மட்டுமே அகலப்படுத்துகிறது. வீக்கத்தை கட்டுப்படுத்துவதில்லை.
மேலும் பல மாதங்களாக இதை பயன்படுத்தும்போது, ஆஸ்தாலின் இன்ஹேலர் செயல்பாடு குறைகிறது. எனவே ஆஸ்தாலினை, தொடர்ந்து பயன்படுத்தாமல், அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு நுரையீரல் நிபுணரை அணுகி, 'ஆஸ்தாலினுக்கு' பதிலாக, உங்களுக்கு ஏற்ற இன்ஹேலரை பயன்படுத்துவது நல்லது.
எனது குழந்தைக்கு பலமாதங்களாக சளி, இருமல் உள்ளது. எங்கள் டாக்டர், மேன்டேக்ஸ் பரிசோதனை செய்யும்படி கூறினார். மேன்டேக்ஸ் பரிசோதனை என்றால் என்ன?
உங்கள் குழந்தைக்கு டி.பி., கிருமியால், நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவே, மேன்டேக்ஸ் பரிசோதனையை பரிந்துரைத்துள்ளார். மேன்டேக்ஸ் பரிசோதனையில், ஊசியை கையில் போடுவர். அடுத்த 48 மணி நேரத்திற்குள், ஊசிகுத்திய இடத்தில், குழந்தைக்கு 10 மி.மீ., அகலத்திற்கும், பெரியவர்கள் எனில் 15 மி.மீ.,க்கு அதிகமாக, சிவந்தும், தடித்தும் காணப்பட்டால், டி.பி., கிருமியால் நோய் தொற்று இருப்பதை அறியலாம். மேன்டேக்ஸ் பரிசோதனையில் ஊசியின் டோஸ் மிகமுக்கியம். நம் நாட்டில் ஒரு டியூபர்கிளின் யூனிட் என்ற அளவில் டோஸ் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் பரிசோதனை டோஸ் அதிகமாக இருந்தால், டி.பி., கிருமி இல்லையென்றாலும், கிருமி இருப்பதைப் போல காண்பிக்கும். அதனால் சரியான பரிசோதனை டோஸ் முக்கியம். டி.பி., நோயை மார்பக எக்ஸ்ரே, சில ரத்தப் பரிசோதனைகள் மூலமும் அறிந்து கொள்ள முடியும். ஆகையால், மான்டேக்ஸ் பரிசோதனையை மட்டும் வைத்து முடிவு எடுக்க தேவையில்லை.
கல்லூரி மாணவியான நான், புதிய ஆண்டில், எனது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு புத்தாண்டின்போதும், நாம் ஒரு உறுதிமொழி எடுப்பது உண்மை. அதை எவ்வாறு பின்பற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். பொதுவாக படிப்பு, வேலை, வருமானம் போன்றவற்றுக்குத்தான் நாம் முக்கியத்துவம் தருகிறோம். உடல் நலம், உடற்பயிற்சிக்கு மக்களிடம் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, நல்ல சத்தான உணவு, தினமும் உடற்பயிற்சி அவசியம். புகைபிடித்தல், மது, நொறுக்கு தீனிகளை தவிர்த்தல் வேண்டும். அதிக தண்ணீர் அருந்தலாம். சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்க முயற்சிக்கலாம். இதனால் நுரையீரல் பல்லாண்டுகள் ஆரோக்கியமாக இருக்கும். எனவே புத்தாண்டில் நீங்கள் மட்டும் இன்றி, குழந்தைகளுக்கும் உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்து கூறுங்கள்.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425 - 24147