PUBLISHED ON : செப் 23, 2014
*வாழைப்பழம்: -ஒரு கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து, ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
*ஆப்பிள்: ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள், மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்னை இருந்தால், ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
* பட்டர் ப்ரூட்: அவக்கோடா எனப்படும் பட்டர் ப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம். அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.
* பியர்ஸ் பழம்: குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பியர்ஸ் பழமும் நல்லதுதான். ஆப்பிள் போலவே வேக வைத்து மசித்து கொடுக்கலாம்.
* சப்போட்டா: இந்த பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை இது. விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம்.
*வேக வைத்து மசித்த காய்கறிகள்:
பழங்களைக் கொடுத்து பழக்கி, இரண்டு வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் இரண்டு ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்து விட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி, பழங்களை இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து எடுப்பது நல்லது.
* இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை, குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.
*எந்த உணவையும் முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துக்கொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி மலச்சிக்கல் ஆகி விடும். அந்த குழந்தைகளுக்கு காலையில் பால் கொடுப்பதற்கு பதில், இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும்.
* ஒவ்வாமை: குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கிறார்கள். சில குழந்தைகளுக்கு உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.
குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசவுகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

