PUBLISHED ON : டிச 20, 2015
கர்ப்பம் தரித்தல் என்பது பெண்களின் வாழ்க்கையில், மகிழ்ச்சியான தருணமாகும். கருவை சுமந்து உலகுக்கு தரும் பொறுப்பை, கடவுள் பெண்ணுக்கு மட்டும் கொடுத்ததில் பல்வேறு இயற்கை ரீதியான காரணங்கள் உண்டு. இந்த விசேஷ பண்புக்காக, பெண்கள் பெருமிதம் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆனால், கர்ப்பத்தை போல அறிகுறிகளை காட்டி, பின் முடக்கிப் போடும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தால், பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடலாம். இதை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்தால், முறையான சிகிச்சை மட்டுமே தீர்வாக அமையும்.
அறிகுறிகள்: முத்துப்பிள்ளை கர்ப்பத்திலும், சாதாரண கர்ப்பிணிகளுக்கு இருக்கும், மாதவிலக்கு தள்ளிப்போதல், வாந்தி, தலைசுற்றல், மயக்கம் இருக்கும். சிலருக்கு, ரத்தப்போக்கு பாதிப்பு ஏற்பட்டு அவதிப்படுவர். சிறுநீரகத்தில் புரதத்தில் அளவு அதிகமாகி, ஹைப்பர் தைராய்டு பாதிப்பு ஏற்படலாம். இதனால் கூட, அதிக களைப்பு, வியர்வை ஏற்படும்.
கண்டுபிடிக்கும் வழிமுறை: முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரிக்கும் போது ஏற்படும் விரிவாக்கத்தை விட அதிகமாக இருக்கும். ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வரும், ஹெச்.சி.ஜி., ஹார்மோன் அளவீடு குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். ஸ்கேன் மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் தோன்றலாம். இதைக் கொண்டு, முத்துப்பிள்ளை இருப்பதை அறியலாம்.
சிகிச்சை: ஹெச்.சி.ஜி. ஹார்மோன் அளவுகளை சரிப்பார்த்ததும், ரத்தசோகைக்கான சோதனையும், நெஞ்சுப் பகுதிக்கு ஒரு எக்ஸ்ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். இது, முத்துப்பிள்ளை கர்ப்பத் திசுக்கள், பரவியிருக்கும் இடங்களை அறிய உதவும். ஏனெனில், அந்த திசுக்கள் நுரையீரல் உள்பட, உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம்.
அடுத்து, வாக்குவம் ஆஸ்பிரேஷன் என்கிற முறையில், கருவை வெளியே எடுப்பதுதான் தீர்வு. இந்த அறுவை சிகிச்சையின் போது, ரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால், தேவையான ரத்தத்தை தயாராக வைத்து கொண்டு தான், சிகிச்சை தொடங்குவர். கர்ப்பப்பை சுருங்கவும், மருந்துகள் கொடுக்கப்படும்.
முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால், கர்ப்பப்பையில் மட்டும்தான் இருக்கும். அதுவே, புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என, எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம். ஆனால் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபி சிகிச்சையின் மூலம், இந்த புற்றுநோயை, 100 சதவிகிதம் குணப்படுத்த முடியும்.
புற்றுநோயாக மாறுகிற வாய்ப்பானது, முழுமையான முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில், 15 முதல் 20 சதவிகிதமும், பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், 5 சதவிகிதமும் இருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்தாலும், அடிக்கடி ஹெச்.சி.ஜி., அளவை சரி பார்க்க வேண்டும்.

