PUBLISHED ON : செப் 21, 2014

* என் சகோதரி குழந்தைக்கு, ஒன்பது வயதாகிறது. ஒன்றரை வயதில், 'எக்கோ' டெஸ்ட் எடுத்தபோது, இதயத்தில், ஏ.எஸ்.டி., எனப்படும் ஒட்டை உள்ளது என்றனர். பயமாக உள்ளது. குழந்தை வளரும்போது துளை தானாக மூடுமா? மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா? ஆபரேஷன் இன்றி ஏதாவது செய்ய முடியுமா?
- ஜெயந்தி, பள்ளபாளையம், திருப்பூர்.
இதயத்தின் வலது ஆரிக்கல், இடது ஆரிக்கிலுக்கு இடையே, துளை இருப்பதை தான் இப்படி கூறியுள்ளனர். இதனால், தூய ரத்தமும், அசுத்த ரத்தமும் கலந்து, சிக்கலாகி விடும். குழந்தை வளரும்போது, துளை, தானாக மூட வாய்ப்பே இல்லை. மருந்து, மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியாது. அறுவைச் சிகிச்சை தான் தீர்வு.
தற்போது, 'எக்கோ' பரிசோதனை செய்து, துளையின் அளவு, எந்த அளவில் உள்ளது என, பார்க்க வேண்டும். துளையின் அளவு சிறியதாக இருந்தால், ஆஞ்சியோ கத்தீட்ரல் முறையில், அறுவைச் சிகிச்சை இல்லாமல் அடைத்து விட முடியும்.
துளையின் அளவு பெரிதாக இருந்தால், அறுவைச் சிகிச்சை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. மார்பை பிளக்காமல், சிறு துளை வழி அறுவைச் சிகிச்சை வசதி, அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
* எனக்கு வயது, 64. இரண்டு முறை, பைபாஸ் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். நீரிழிவு, ரத்த கொதிப்பு நோயாளியாக இருந்தாலும், நடைபயிற்சி, மருந்துகள் மூலம், அவை கட்டுக்குள் உள்ளன. தொடர்ந்து, மாத்திரைகள் சாப்பிட்ட வருகிறேன். ஓராண்டாக, பொட்டாசியம், சோடியம் அளவு, பார்டரில் உள்ளது. இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். இதற்காக, காய்கறி, கீரை வகைகள் என்ன சாப்பிட வேண்டும்?
- ஆர்.அண்ணாதுரை, சென்னை.
நீங்கள் சாப்பிட்டு வரும் மாத்திரைகளில் எந்த சிக்கலும் இல்லை; தொடரலாம். பொட்டாசியம், சோடியம் அளவை அதிகரிக்க, நீங்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். ஆனால், சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, 'பாட்கிளார்' திரவ மருந்து வாங்கி, காலை, இரவு தினமும், 2 ஸ்பூன் சாப்பிட்டு வரவேண்டும்.
தினமும், மலைப்பூண்டின் ஐந்து பற்களை, எண்ணெய் இன்றி வறுத்து சாப்பிடலாம். டீ, காபி சாப்பிடும் பழக்கம் இருந்தால், அவற்றை நிறுத்த வேண்டும். தினமும், 40 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள். பிரச்னைகள் தீரும்.
டாக்டர் கே.எஸ்.கணேசன்,
இதய துளை வழி அறுவை சிகிச்சை நிபுணர்,
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.

