PUBLISHED ON : நவ 13, 2022

சர்க்கரைக் கோளாறு என்பது நோயல்ல...கணையம் சுரக்கும் இன்சுலினை, நம் உடம்பு தேவையான அளவு பயன்படுத்த தவறுவதுஅல்லது போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பது, இந்த இரண்டு நிலைகளிலும், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதுதான் சர்க்கரைக் கோளாறு.
ஆண்டுதோறும் சர்க்கரைக் கோளாறால், 10 - 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சர்க்கரைக் கோளாறால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
'டைப் - 1' கோளாறு - கணையம், இன்சுலின் ஹார்மோனை அறவே சுரக்காத நிலை இது. பிறந்த குழந்தைகளுக்கும் வரும் இப்பிரச்னைக்கு, இன்சுலின் ஊசி மட்டுமே தீர்வு.
'டைப் - 2' கோளாறு - போதுமான அளவு இன்சுலினை கணை யம் சுரக்காது. சிலருக்கு இன்சுலின் சுரந்தாலும் அது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வேலையை அறவே செய்யாது.
மரபியல் காரணிகளால் வரும் சர்க்கரைக் கோளாறை டைப் - 1 அல்லது டைப் - 2 என்றும், பிறந்த ஆறு மாதங்களுக்குள் குழந்தைக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதை டைப் - 1 வகை என்றும் தவறாக பல நேரேங்களில் முடிவு செய்கின்றனர். வேறு சில காரணங்களால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதை டைப் - 2 என்று முடிவு செய்கிறோம். இவர்களுக்கு வாழ்க்கை முறை மாற்றத்தினாலேயே சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்து விடும். காரணத்தை தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை தர வேண்டும்.
கோளாறின் அடிப்படை அறிகுறிகளை கவனிக்காமல் விட்டால், இன்சுலின் குறைவால், ரத்தத்தில் சீட்டோன் அமிலங்கள் அதிகமாகி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம்.
வளரும் பருவத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவை குழந்தைகளுக்குத் தர வேண்டும். மைதாவில் தயாரித்த உணவுகள், வெள்ளைச் சர்க்கரையை தவிர்க்க வேண்டும். வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகம் சாப்பிட தரலாம்.
டைப் - 1 கோளாறு இருக்கும் குழந்தைகள் மருத்துவர் பரிந்துரைத்தபடி, அடிக்கடி ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து, உடல் தேவைக்கு ஏற்ப உணவு சாப்பிட்டு, மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் கட்டுப்பாடற்ற சர்க்கரைக் கோளாறு இருந்தால், கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகள், இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
- ஜர்னல் ஆப் டயாபடிக் மெலிட்டஸ்
