சர்க்கரை கோளாறுக்கு தீர்வு தரும் 'ஸ்டெம் செல்' சிகிச்சை!
சர்க்கரை கோளாறுக்கு தீர்வு தரும் 'ஸ்டெம் செல்' சிகிச்சை!
PUBLISHED ON : நவ 13, 2022

எல்லாவித உடல் கோளாறுகளுக்கும் 'ஸ்டெம் செல்' எனப்படும் மூல செல்களை பயன்படுத்தி சிகிச்சை செய்கிறோம். தொப்புள் கொடியை வெட்டியதும் வரும் முதல் ரத்தத்தில், அதிக அளவில் ஸ்டெம் செல்கள் இருக்கும். இந்த ரத்தத்தை பாதுகாத்து வைப்பதன் வாயிலாக, எதிர்காலத்தில் உடல் பிரச்னைகள் ஏற்படும் போது, இந்த ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்களை செலுத்தி, கோளாறை சரி செய்ய முடியும்.
சர்க்கரைக் கோளாறைப் பொறுத்தவரை, 'டைப் - 1' வகைக்கு, ஸ்டெம் செல் சிகிச்சையில் தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சிகள் இதுவரை நடந்துள்ளன.
சேமித்து வைக்கப்பட்ட ஸ்டெம் செல்களில் இருந்து, இன்சுலினை உருவாக்கும் செல்களை பிரித்து எடுத்து, அவற்றை கல்லீரலில் செலுத்தி, இன்சுலினை உருவாக்கும் பீட்டா செல்களை வளர்த்தால், தேவையான இன்சுலின் உடலில் உற்பத்தி ஆகும் என்று தான் ஆராய்ச்சியின் துவக்கத்தில் சொல்லப்பட்டது.
'ஹியூமன் டிரையல்' எனப்படும் மனிதர்களை வைத்து ஆராய்ச்சி செய்ததில், ஸ்டெம் செல் செலுத்திய டைப் - 1 சர்க்கரை நோயாளி களுக்கு, இந்த சிகிச்சைக்கு பின், அடுத்த நான்கு ஆண்டுகள் தனியாக இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை; ஆனால், அதன்பின், அவர்களின் ரத்த சர்க்கரை அளவு அதிகமானது.
எதனால் இப்படி என்று ஆராய்ந்ததில், தானம் பெற்ற ஸ்டெம் செல்களை செலுத்தியதால், டைப் - 1 சர்க்கரை நோயாளிகளின் உடலில், ஆன்டிபாடீஸ் எனப்படும் எதிர்ப்பணுக்கள் அதிகம் உற்பத்தி ஆகி, புதிதாக உருவான கணைய பீட்டா செல்களை அழிப்பது தெரிந்தது. இதன் தொடர்ச்சியாக, ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோமில் செய்யப்பட்ட ஆய்வில், டைப் - 1 சர்க்கரை கோளாறு உள்ள குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்களில், பீட்டா செல்களை உருவாக்கும் செல்லை கண்டறிந்து, அதை மரபணு மாற்றம் செய்து, அதை தேவைப்படும் நபர்களுக்கு செலுத்தும் போது, எதிர்ப்பணுக்கள் உருவாவதில்லை என்பது உறுதியானது.
இந்த ஆராய்ச்சி முழுமையாக வெற்றி பெற்று, நடைமுறைக்கு வரும் பட்சத்தில், டைப் - 1 சர்க்கரை கோளாறுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கலாம். இது அடுத்த ஓரிரு ஆண்டு களில் சாத்தியம் ஆகும் என்று நம்புகிறேன். இதைத் தொடர்ந்து டைப் - 2 சர்க்கரை கோளாறுக்கும் தீர்வு காணும் வகையில், ஸ்டெம் சிகிச்சை ஆராய்ச்சி தொடரலாம்.
டாக்டர் வி.அஸ்வின் கருப்பன்,சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசகர்,சென்னை.
044 - 4477 7000
