PUBLISHED ON : செப் 29, 2013
கே.கார்த்திகேயன், மதுரை: எனது வயது 52. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இல்லை. தினமும் 5 கப் காபி அருந்துகிறேன். இதனால் ஏதும் பாதிப்பு வருமா?
காபி அற்புதமான பானம். காபி அருந்துவோரை 13 ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்தனர். இதில், காபிஅருந்துவோருக்கு, மற்றவர்களைவிட, இறப்பு வரும் தன்மை 13 சதவீதம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. காபி கொட்டையில் உள்ள 'ஆன்டி ஆக்ஸிடென்ட்' பொருட்கள் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல்., கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் குறைகிறது.
தினமும் காபி அருந்துவதால், ஹார்ட் பெயிலியர் வரும் தன்மையும் குறையும். அவர்களுக்கு பக்கவாதம் வரும் தன்மை, மற்றவரைக்காட்டிலும் 17 சதவீதம் குறைவாக உள்ளது. காபியில் உள்ள 'குளோரோ ஜெனிக் ஆசிட்' என்னும் பொருளால், சர்க்கரை நோய் வரும் தன்மையும் பலமடங்கு குறைக்கப்படுகிறது. காபிஅருந்துவோருக்கு எடை குறைகிறது. தலை, கழுத்து, கர்ப்பப்பை, புராஸ்டேட் மற்றும் மார்பக கேன்சர்கள் குறைக்கப்படுகிறது. மனஅழுத்தம், பார்க்கின்ஸன் நோய் வரும் தன்மையும் குறைகிறது.
அதேசமயம், காபி அருந்துவோருக்கு, சிறிய அளவிலான பாதிப்புகளும் உள்ளன. ரத்தஅழுத்தம் சிறிது கூடுவது, மனபதட்டம், தூக்கமின்மை, கைநடுக்கம் ஆகியவை முக்கியமானவை. தினமும் சர்க்கரை இல்லாமல், தண்ணீர் கலந்த பாலுடன், 2 கப் காபி அருந்துவது நம் உடலுக்கு ஆரோக்கியமானது.
எஸ்.சாந்திமீனா, திண்டுக்கல்: எனது கணவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார். ஆனால் சமீபகாலம் வரை நிறுத்தி வைத்திருந்த புகைப்பழக்கத்தை மீண்டும் துவக்கி உள்ளார். இதனால் பாதிப்பு வருமா?
இருதய நோயை தடுக்க புகைப்பழக்கத்தை நிறுத்துவதே முதற்கட்ட நடவடிக்கை. புகை பிடிக்கும் நோயாளிகள், அதை நிறுத்தினால், அவரது இருதயத்திற்கு ஏற்படும் பலன், ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரி சிகிச்சையைவிட மேலானதாக இருக்கும். இப்பழக்கத்தால் ஸ்டென்டுக்குள் மறுபடியும் அடைப்பு ஏற்படும் தன்மையும், இருதயத்தின் வேறு ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்படும் தன்மையும் பலமடங்கு கூடுகிறது. எனவே புகைப்பழக்கத்தை நிறுத்துவது அவசியம்.
வி.செல்லப்பா, பெரியகுளம்: எனக்கு மாரடைப்பு வந்து 6 மாதங்களாகிறது. அதன்பின் 10 கிலோ எடை குறைந்துவிட்டேன். இதற்கு நான் எடுக்கும் மருந்துகள் காரணமா?
இருதய நோயாளிகளுக்கு பல்வேறு காரணங்களால் எடை குறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் எடுக்கும் உணவின் அளவு, சாப்பாட்டில் கொழுப்புச் சத்து இல்லாத தன்மையும் காரணங்களாகும்.சில மருந்துகளும் காரணமாக உள்ளன. ஆனால் 10 கிலோ எடை குறைவு என்பது மிகஅதிகம். எனவே உங்கள் டாக்டரை சந்தித்து வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என கண்டறிய, ரத்தம், சிறுநீர், ஸ்கேன் பரிசோதனைகள் தேவை.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344
