PUBLISHED ON : ஜூன் 10, 2012

எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 2 ஆண்டுகளாகிறது. பல்லில் தீவிரமாக வலி உள்ளது. பல்டாக்டரோ பல்லை எடுக்க வேண்டும் என்கிறார். நான் பல்லை எடுத்துவிடலாமா? எஸ்.ராதாகிருஷ்ணன், மதுரை
பைபாஸ் சர்ஜரி செய்தவர் தாராளமாக பல்லை எடுக்கலாம். பல்லை எடுக்கும் முன்பாக உங்கள் இருதய டாக்டரிடம் சென்று, அடிப்படை பரிசோதனைகளை செய்து, அனைத்து முடிவுகளும் நார்மலாக உள்ளதா என அறிந்து கொள்வது அவசியம். பிறகு நீங்கள் எடுத்து வரும் ஆஸ்பிரின் மற்றும் குளோபிடோகிரில் மருந்துகளை 5 நாட்களுக்கு முன் நிறுத்திவிட வேண்டும். அதேசமயம் மற்ற மருந்துகளை தொடரலாம். பல்லை எடுத்துவிட்டு மறுநாள் முதல் ஆஸ்பிரின், குளோபிடோகிரில் மாத்திரைகளை தொடரலாம்.
எனது வயது 51. ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை என எதுவும் கிடையாது. கடந்த ஒருமாதமாக வேலை காரணமாக பல்வேறு ஓட்டல்களில், கண்ட கண்ட உணவை எடுத்து வருகிறேன். இதனால் எனது உணவுப் பழக்கமே மாறிவிட்டது. இதனால் எனது உடலில் பாதிப்பு எதுவும் ஏற்படுமா? பி. பாலமுருகன், பழநி
உடலை பாதிக்கும் எண்ணெயில் பொரித்த உணவு, இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தொடர்ந்து ஒருமாதமாக எடுத்தால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். குறிப்பாக உடல் எடை கூடி, சர்க்கரை, உயர் ரத்தஅழுத்தம் ஏற்படும் தன்மை உள்ளது. எனவே வேறு ஊர்களுக்குச் சென்றாலும் சரியான ஓட்டலில், சரியான உணவை எடுப்பது அவசியம். அதாவது இட்லி, இடியாப்பம், எண்ணெய் இல்லாத தோசை, சப்பாத்தியை உண்ணலாம். 95 சதவீதம் நம் உணவு சரியாக இருந்து, 5 சதவீதம் மாறுபாடான உணவை எடுத்தால், அது நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் கூறியதுபோல ஒருமாதம் என்பது, மேலும் நீடித்தால் பாதிப்பை ஏற்படுத்துவது நிச்சயம். பெட்ரோலில் ஓடும் வாகனத்தில் மண்ணெண்ணெய் ஊற்றினால் பாதிப்பது போல ஆகிவிடும் என்பதுதான் உண்மை.
எனது தந்தைக்கு 2 மாதங்களாக உடல் மிகவும் பலவீனமாக உள்ளது. இதற்கு இருதய நோய் காரணமாக இருக்குமா?
ஆர். சத்தியமூர்த்தி, ராஜபாளையம்
உடல் பலவீனம் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். உடனடியாக நீங்கள் ஒரு டாக்டரிடம் சென்று, ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, வயிற்று ஸ்கேன் பரிசோதனைகளை செய்து கொள்வது மிகவும் அவசியம். இதில் எதனால் உடல் பலவீனம் ஏற்படுகிறது என கண்டறிய முடியும். இருதயத்தை பொறுத்தவரை அதன் பம்பிங் திறன் குறைவு, துடிப்பு குறைவு, வால்வுகளில் கோளாறு இருந்தால் பலவீனம் ஏற்படலாம்.
இருதய நோய் உள்ள பெண்கள் பிரசவிக்க முடியுமா? ஆர். சாந்தி, பரமக்குடி
இருதய நோய் என்பது ஒரு பொதுவான சொல். ஒருவருக்கு எவ்வாறு இருதயம் பாதித்து இருக்கிறது என்பதை பொறுத்தே அவர் பிரசவிக்க தகுதி உள்ளவரா என்பது உள்ளது. அதாவது பிறவியிலேயே இருதய ஓட்டை, வால்வுகளில் கோளாறு, நுரையீரலில் ரத்தஅழுத்தம் இருந்தால் அதன் தீவிரத்தை பொறுத்து பிரசவிக்க முடியுமா என கூறலாம். வால்வு கோளாறு உள்ளவர்களுக்கு பலூன் சிகிச்சையோ, ஆப்பரேஷன் செய்தோ அதன் பின்னர் பிரசவிக்க முடியும். பம்பிங் திறன் குறைவாக உள்ளவருக்கு எந்தளவு பம்பிங் திறன், குறைந்துள்ளது என்பதை பொறுத்து கூறலாம். பொதுவாகக் கூற வேண்டும் என்றால், இருதய மருத்துவர், மகப்பேறு மருத்துவர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது. இருதய நோய் உள்ள பெண்களுக்கு தற்போதுள்ள நவீன வசதிகள் மூலம் எவ்வித சிக்கலும் இன்றி பிரசவிக்கச் செய்யலாம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.

