PUBLISHED ON : ஏப் 15, 2012

கே.ராமானுஜம், ராமநாதபுரம்: ஜப்பானியருக்கு இதய வியாதியும் குறைவு, ஆயுளும் நீண்டதாக உள்ளது, எதனால்?
ஜப்பானியர் பெரும்பாலும் ஒல்லியாக இருப்பர். உணவில் காய்கறி, பழங்களை அதிகமாக உட்கொள்கின்றனர். இதுமட்டுமின்றி, மீன், மீன் சார்ந்த உணவும் தினமும் அவர்கள் உண்பதால், பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கிறது. அவர்கள் உபயோகிக்கும் Chop Sticks மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட நேரம் சாப்பிடுகின்றனர். மெதுவாக உண்பதால் உணவு அளவு குறைகிறது.
மெதுவாக உணவை உட்கொண்டாலே, உடல் பருமன் கூடாது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்துடன் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதும் காரணமாக உள்ளது. உணவுப் பழக்கம், அதை எடுத்துக் கொள்ளும் முறை, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாகும்.
ஆர்.சந்தானகிருஷ்ணன், ராஜபாளையம்: உடற்பயிற்சி செய்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமா?
தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஞாபக சக்தி குறையாது என ஆய்வுகள் கூறுகின்றன. இதுமட்டுமின்றி, உடற்பயிற்சி செய்பவருக்கு, 'Endorphins' என்னும் பொருள், மூளையில் சுரக்கிறது. இதை, 'Feel Good Hormone' என்பர். இதனால், நமக்கு நேர்மறையான எண்ணம் உருவாகிறது. ஞாபக சக்தியும் நன்றாகத் தான் இருக்கும்.
'Endorphins' மூளையில் உள்ள Hippocampus என்னும் இடத்தில் செல்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, நல்ல எண்ணமும் உருவா கிறது. இதனால் ஞாபக சக்தியும் நன்றாகவே உள்ளது.
பி. சங்கரபாண்டியன், மதுரை: எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து, ஆறு ஆண்டுகளாகிறது. சிறிது தூரம் நடந்தால் நெஞ்சு அடைப்பது போல உள்ளது. நான் என்ன செய்வது?
பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சு அடைப்பது போல இருக்கிறதென்றால், இது இதயத்தில் மறுபடியும் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியே. உங்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை அவசியம் தேவை.
அதில் ரத்த நாளங்களில் அடைப்பு கூடி உள்ளதா, என கண்டறிய முடியும். தற்போது இதற்கு நவீன ஸ்டென்ட் மூலம் ரத்தநாள அடைப்பு, பொருத்தப்பட்ட 'கிராப்ட்' டில் உள்ள அடைப்பை சரிசெய்யலாம். எனவே, இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.
டாக்டர் விவேக்போஸ், மதுரை
